கவிக்கோவின் இழப்பு கவியுலகின் பேரிழப்பு

முன்னாள் அமைச்சர்  . எச். எம். அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)



பாவலர்கள் இல்லாத மண் பாலை வனமோ என்று கேட்கக் கூடிய விதமாக கவிக்கோ அப்துல் ரஹ்மான் இல்லாத தமிழகம் இன்று ஒரு பாலைவனமாக எமக்கு காட்சி தருகிறது என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான . எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கவிக்கோ அப்துல் ரஹ்மானுடைய மறைவுச் செய்தி எமக்கு எட்டியவுடன் எம்முள் ஏற்பட்ட துயரத்தின் ஆழத்தை நாம் அளவிடமுடியாது. அவ்வளவு தூரம் தமிழ் கூறு நல்லுலகெங்கும் பெயர் பெற்று விளங்குகின்ற பேரறிஞர்.
நாம் வாழ்ந்த காலத்திலே அவரோடு பிணைப்பும் இணைப்பும் எமக்கு ஏற்பட்டது ஒரு முக்கிய விடயமாகக் காணப்படுகிறது.
சென்ற 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் சென்ற போதெல்லாம் கவிக்கோவை சந்திப்பது வழக்கம். ‘காயிதே மில்லத்முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப், ‘சிராஜ் மில்லத்ரீ. கே. . அப்துல் சமத் போன்றவர்களுடைய பெருமதிப்புக்கும் உரித்தானவர் கவிக்கோ.
அவர் வாழ்நாளில் பெற்ற விருதுகளை நாம் விரல் விட்டு எண்ண முடியாது. அவருடைய ஓங்கு புகழை நாம் மேலும் ஓங்காரமாக ஒலிக்கச் செய்ய முடியாது. 1937 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த கவிக்கோ, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராகக் கடமையாற்றிகற்றோர் மத்தியில் பெரும் புகழோடு இவர் விளங்கினார்.
தமிழுக்கான சாஹித்திய அகடமி விருதை 2009ஆம் ஆண்டு பெற்றதோடு,கலைஞர் விருது, கலைமாமணி விருது, பாரதிதாஸன் விருது, கம்பர் விருது, பொதிகை விருது, இலக்கிய விருது, உமறுப்புலவர் விருது போன்ற இன்னும் ஏராளமான உயர் விருதுகளையும் பெற்ற தனிச்சிறப்பு மிக்கவராக கவிக்கோ திகழ்ந்தார்.
இலங்கையின் கம்பன் கழகத்தில் கவிக்கோ அடிக்கடி வரவேற்கப்படுவார். இலங்கைத் தமிழர்கள் அவருடைய சொற்பொழிவைக் கேட்டு பரவசமுற்ற பல சந்தர்ப்பங்களைக் கண்டிருக்கின்றேன். கம்பவாரிதி ஜெயராஜ் ஐயாவுடைய அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமானவர்தான் கவிக்கோ.
இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்த பல தமிழ் இலக்கிய மாநாடுகளில் அவர் ஆற்றிய சொற்பொழிவையும் கவிதானத்தையும் கேட்டு வியந்தவன் நான்.
நான் முஸ்லிம் விவகார அமைச்சராக இருந்த போது, கவிக்கோவை வரவழைத்து, கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் விரிவுரைகளையும் கவிவரிகளையும் பாட வைத்து மகிழ்ந்த அந்த மறக்க முடியாத நினைவலைகளிலிருந்து எம்மால் இன்றும் மீள முடியவில்லை.
எல்லாம் வல்ல இறைவன்மஹ்பீரத்எனும் மன்னிப்பை வழங்கி, அவர் குடும்பத்தவர்கள், பிள்ளைகள் அனைவருக்கும் மற்றும் அவரைச் சார்ந்த இயக்கத்தினர், தமிழ் நாட்டு முஸ்லிம்கள் அனைவருக்கும்பஸ்ஜித் ஜமீல்என்ற அழகிய பொறுமையை அளிப்பானாக!

அவருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க இப்புனித ரமழான் மாதத்தில் துஆச் செய்கிறேன் - என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top