புத்தளம் நகரத்துக்குப் பல்வேறு அநியாயங்கள் இடம்பெறுவதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
"கொழும்பில் சேரும் குப்பைகளை, புத்தளத்துக்குக் கொண்டு செல்வதற்கு, தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அமைச்சரவை எந்தவிதமான எதிர்பையும் காட்டாமல் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தபோதே, அதற்குக் கடுமையான எதிர்ப்பை அமைச்சர் ரிஷாட் வெளியிட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் சேரும் குப்பைகளை, புத்தளம், அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டு செல்வதற்கு, தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அமைச்சரவை எந்தவிதமான எதிர்பையும் காட்டாமல், பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென, அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரி நின்றார்.
அப்போது அமைச்சர் ரிஷாட், தனது எதிர்ப்பைத் தெரிவிக்கையில்,
“புத்தளத்தை, அரசாங்கம் தொடர்ந்தும் துன்பப்படுத்தி வருகின்றது. வட மாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களைத் தாங்கிக் கொண்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்த பின்னர் துன்பத்திலே, அந்த மக்கள் வாழ்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கு எந்த இழப்பீடுகளும் நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை.
“அத்துடன், சீமெந்து தொழிற்சாலையை, அங்கு நிறுவி, புத்தளத்தை மாசுபடுத்தியுள்ளீர்கள். அனல்மின் நிலையத்தையும் கொண்டு வந்து, அந்த மக்களை, கஷ்டத்தில் போட்டுள்ளீர்கள்” என்றார்.
எனினும், “அரசாங்கம், அபிவிருத்தியைத் தானே செய்துள்ளது. அதைக் குறை சொல்ல வேண்டாம்” என, அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, தனது எதிர்ப்பை இதன்போது தெரிவித்தார்.
அமைச்சர் யாப்பாவுக்குப் பதிலளித்த அமைச்சர் ரிஷாட்,
“அபிவிருத்தி என்றால், இங்கே ஏன் கொண்டு வரவேண்டும். வேறு எங்கேயாவது கொண்டு சென்றிருக்கலாமே. சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்டபோது, எதிர்ப்புகளால் தானே கைவிடப்பட்டது. புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும்போது, தொழில்வாய்ப்பில் 50 சதவீதம் தருவதாகக் கூறினீர்களே, அது நடந்ததா?
“1989ஆம் ஆண்டிலிருந்து, இந்த மக்களுக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை. தேசிய கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாந்து போயுள்ளனர். அரசியல் அநாதைகளாக இருக்கும் அந்த மக்களைப் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் நீங்களும் துன்பப்படுத்துகிறீர்கள்” என்றார்.
“அமைச்சர் ரிஷாட் கூறுவது சரி. அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது” என அமைச்சர் கபீர்காசிம் தனது ஆதரவை இதன்போது தெரிவித்தார்.
நடந்ததை அவதானித்திருந்த ஜனாதிபதி, அமைச்சரவை செயலாளரிடம், “அமைச்சர் ரிஷாட் இதற்கு எதிர்ப்பு என்று எழுதிக் கொள்ளுங்கள்” என்றதுடன், “அமைச்சர் சம்பிக்க, இந்த விடயங்களைப் புத்தள மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் விளக்கி, மக்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியும்” என்றார்.
“மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அநேகர் ஆனமடுவ, வென்னப்புவ தொகுதிகளிலிருந்து கலந்துகொள்பவர்கள், இவர்கள் இது சரி என்று தீர்மானம் எடுத்தால் என்ன நடக்கும். எனவே, இந்த விடயத்தில் நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment