உத்தேச புதிய அரசியல்யாப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன இன்று இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

உத்தேச புதிய அரசியல் யாப்பு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஒரு சில மாதங்களில் இதுதொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர் :
உள்ளுராட்சி மன்ற தேர்தல் எப்பொழுது நடைபெறும்?
இந்த மகாநாட்டில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர பதிலளிக்கையில்
விகிதாசார முறை தொடர்பில் தற்பொழுது விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 60 க்கு 30 என்ற அடிப்படையில் இருந்த ஏற்பாட்டை தற்பொழுது 55 க்கு 45 என்ற அடிப்படையில் மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.

இது தொடர்பான விடயங்களில் தற்பொழுது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இன்றும் நாளையும் நாளை மறுதினமும் இந்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுடன் தீர்வைக்காண்பதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம்.

ஏற்கனவே முன்வைத்த ஆலோசனைக்கமைவாக உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை 4200 இலிருந்து 8000 மாக அதிகரிக்கவேண்டும் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அதிகரிக்கப்படுவது நாட்டிற்கு பாரிய சுமையாக அமையும் என்பதினாலேயே இந்த விடயத்தில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றோம்.

விரைவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என்பதே சமகால அரசாங்கத்தின் நோக்கமும் விருப்பமும் ஆகும். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இதுதொடர்பான விடயங்களில் தற்பொழுது கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக ,
உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலான திருத்த சட்டமூல பிரேரணை நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top