சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை கட்டடத்தில்
தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் என்ன கூறுகிறார்கள்
புதன்கிழமை காலை, சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து என்ற செய்தியுடன் தான் தமிழகத்தில்
பலருக்கும் பொழுது விடிந்திருக்கும்.
மிகப்பெரிய வணிகக் கட்டடங்களில் கவனிக்கப்படாமல் விடும் பல விதிமுறை மீறல்களும், மோசமான கட்டமைப்புகளும் எவ்வளவு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இந்த தீ விபத்து, அந்த கட்டடத்தில் இருந்த பொருட்களை மட்டும் அல்லாமல், அந்த கட்டடத்தையே சேதப்படுத்திவிட்டது.
இது குறித்து தீயணைப்புத் துறையினர் கூறுவது என்னவென்று பார்க்கலாம்.
தி.நகர் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டிருப்பதாக எங்களுக்கு கூறப்பட்டது.
தீயணைப்பு அதிகாரிகள் அங்கு விரைந்த போது, சுமார் 3 மணியில் இருந்து தீயை அணைக்க, கடை ஊழியர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
தரைத்தளத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து விட்டு, உள்ளே நுழைந்தோம். அந்த நொடி தான் தாமதம், அந்த கட்டடத்தின் பல பகுதிகளில் தீப்பற்றி எரிவதை நாங்கள் பார்த்தோம். கட்டடத்தின் மேல் பகுதியில் சில பொருட்கள் எரிந்து தரை தளத்தில் விழுந்தன என்று கட்டடத்துக்குள் முதன் முதலாக நுழைந்த தீயணைப்பு வீரர் கூறினார்.
உடனடியாக நாங்கள் வெளியே வந்துவிட்டோம். ஏன் என்றால், எரியும் கட்டடத்துக்குள் நிற்பது மிகவும் மோசமானது. உடனடியாக கட்டடத்துக்குள் சிக்கியிருக்கும் ஊழியர்களை மீட்க ஸ்கை லிஃப்ட்டுகள் வரவழைக்கப்பட்டன.
நாங்கள் 11 பேரை மீட்டோம். ஒட்டு மொத்தமாக 14 பேர் அந்த கட்டடத்துக்குள் இருந்து மீட்கப்பட்டனர். அதில்லாமல், கான்டீனில் வைக்கப்பட்டிருந்த 25 எல்பிஜி சிலிண்டர்களையும் உடனடியாக வெளியேற்றினோம்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் தீ சிறிய அளவிலேயே பற்றியது. ஆனால் அது காலை 8 மணியளவில் மற்ற தளங்களுக்கும் பரவிவிட்டது. காலை 9 மணிக்கு மூன்று மாடிகளுக்கும் தீ பரவியது. கட்டடத்தின் பின்புறம் உள்ள சாலைக்குத்தான் தீயணைப்பு வாகனங்களும், தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன.
இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் வெள்ளிப் பொருட்களும், தரைத்தளத்தில் தங்க நகைகளும், அதற்கு மேல் அனைத்து தளங்களிலும் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடைசியாக மேல் மாடியில் கான்டிடீன் இயங்கி வந்தது.
அருகில் உள்ள பல கடைக்காரர்களுக்கும், இப்பகுதியில் தீ விபத்து நடந்ததே தெரிந்திருக்கவில்லை. பலரும் கடைக்கு வந்து பார்க்கும் போதுதான் தெரிந்து கொண்டனர்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தை சுற்றி 100 மீட்டர் அளவில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் உடனடியாக வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், தீ விபத்து நிகழ்ந்த பகுதியை வேடிக்கை பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினோம்.
சுமார் 11 மணியளவில், கட்டடம் முழுவதும் தீ பரவியது. கட்டடத்துக்கு அருகில் இருந்த மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டோம். மேம்பாலத்தில் இருந்த படி, கட்டடத்தின் மேல் தளத்தில் தண்ணீர் பாய்ச்சினோம். கட்டத்தின் நான்கு பக்கங்களில் இருந்தும் தண்ணீர் பாய்ச்சி அடித்தோம்.
சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் இந்த பணியில் ஈடுபட்டன. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, சில சுவர்களில் துளையிட்டு அதன் வழியாகவும் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. அப்போதே, கட்டடத்தின் சில பகுதிகள் உள்ளேயே விழுந்து நொறுங்கும் சத்தங்கள் கேட்டன. உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியதால் உள்ளே என்ன நடந்ததென்றே தெரியவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர்.
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடமும் உதவிகள் கேட்கப்பட்டது. மதியத்துக்கு மேல், அங்கிருந்தும் ஊழியர்கள் வந்துள்ளனர். தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் முதலில் மௌனம் காத்துள்ளனர்.
கட்டடத்தில் இருந்த பயர் பம்ப் இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. நாங்கள் கொண்டு சென்ற இயந்திரங்களையும், மெட்ரோ நிர்வாகம் கொண்டு வந்ததையும் தான் பயன்படுத்தினோம் என்கிறார்கள். எத்தனை லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது என்ற கணக்கே தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
கட்டடம் முழுவதும் எரிந்த தீயை எவ்வளவு போராடியும் இரவு வரை அணைக்க முடியவில்லை. காலையில் பணியை தொடங்கிய போது, மதியத்துக்குள் தீயை அணைத்து விடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இரவு முழுவதும் தீ அணையாது என்றே தெரிய வந்தது என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மேலும் ஒரு பயம் ஏற்பட்டது. அதாவது கட்டடம் முழுவதும் தீயினால் பாதிக்கப்பட்டு சரிந்து விழுந்தால் என்னவாகும் என்பதுதான்.
அவர்கள் பயந்தது போலவே நடந்தும் விட்டது. நள்ளிரவிலேயே கட்டடத்தின் உள் பகுதி முழுவதுமாக இடிந்து உள்ளுக்குள்ளேயே விழுந்து விட்டது. தற்போது கட்டடத்தின் நான்கு பக்க சுவர்கள் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற தொல்லைகளும் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். சிலருக்கு தீக்காயங்களும் ஏற்பட்டன.
நேற்று அதிகாலை தொடங்கிய தீயணைப்புப் பணி இரவைத் தாண்டி மறுநாள் காலையிலும் நீடித்தது. அயராது பணியாற்றி, தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், தீயணைப்பு வாகனங்கள் செல்லக் கூட வழி இல்லாமல் கட்டடம் கட்டப்பட்டிருந்ததால்தான் இந்த அளவுக்கு பெரிய மோசமான விபத்து நேரிட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை மதியத்துக்கு பிறகு இக்கட்டடம் இடிக்கத் தொடங்க உள்ளது தீக்கிரையான கட்டடம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அது இடிந்து தரைமட்டமாகிவிடும்.
0 comments:
Post a Comment