இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கின்றது

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

பொருளாதார மறு சீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் வகிபாகம் பிரதானமானது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளடங்கிய தூதுக்குழுவினர் அமைச்சரை சந்தித்து இந்திய முதலீடுகள் குறித்தும் தங்களது எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர். இதன்போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிடுகையில்,
பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கின்றது. இலங்கையில் இந்தியர்களின் முதலீட்டுத் துறையின் வருமானம் 50மில்லின் டொலருக்கும் 20மில்லின் டொலருக்கும் இடைப்பட்டதாக இருக்கின்றது.
2015ஆம் ஆண்டு இந்தியா இலங்கையின் முதலீட்டில் 5ஆவது இடத்தை வகிக்கின்றது. நீங்கள் முதலீடுகளை இருபக்க வர்த்தகம் மூலம் மேலும் அதிகரிக்க முடியும்.
கடந்த வருடம் நமக்கிடையிலான இருபக்க வர்த்தகம் 4.3 மில்லியன் டொலராக அமைந்திருந்தது. அதே போன்று எமது பிரதான ஏற்றுமதிப் பொருளான வாசனைத் திரவியங்கள், கஜூ, காகித அட்டைகள், கப்பல் மற்றும் படகுகள் ஆகியவை இந்தியாவில் பிரபலம் பெற்று விளங்குகின்றன.
60 சத விகிதத்திற்கு மேலான எமது ஏற்றுமதி பொருட்கள் இலங்கை - இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறுகின்றன.

இந்தியாவின் புதிய முதலீட்டு முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், சரியான பாதையில் நாட்டை இட்டுச் செல்லவும் உதவும் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top