கல்முனை ஸாஹிறாக்கல்லூரியின் பெயரிலான

முகநூல்களையும், இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு 

தொலைபேசி  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

(அபூ முஜாஹித்)



கல்முனை  ஸாஹிறா தேசிய பாடசாலை அதிபரின் அனுமதியின்றி மேற்படி பாடசாலையின் உத்தியோக இலச்சினையை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் காணப்படும் முகநூல்கள் அனைத்தையும் தடை செய்யுமாறு தொலைபேசி  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.முஹம்மட் அனுப்பி வைத்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் உத்தியோக இலச்சினையை பயன்படுத்தி பல்வேறு வகையான முகநூல்கள் சமூக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலையை பற்றியும், நிருவாகத்தைப் பற்றியும் கடுமையான விமர்சனங்களும்,ஆத்திரமூட்டும் பதிவுகளும், சேறு பூசல்களும் இடம்பெற்று வருகின்றன.
இச்செயற்பாடுகள் காரணமாக பாடசாலையின் நற்பெயருக்கு திட்டமிட்ட வகையில் களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. பொறுப்புள்ளவர்கள் எவரும் இதனை அனுமதிக்க முடியாது.
கருத்தாடல்கள், நேர்முக வாதங்கள் மூலம் அடைய முடியாதவற்றை சில நாசகார சக்திகள் முகநூல்களில் பதிவுகளை இடுவதன் மூலம் அடைய முயற்சிக்கின்றன. இதனால் பாடசாலை கட்டுக்கோப்பை திட்டமிட்டு சிதைவடைய முயற்சி செய்யப்படுகிறது.
சில இணையத்தளங்கள், முகநூல்கள் என்பன பாடசாலையின் நல்ல முயற்சிகளுக்கு ஆக்கபூர்வ பதிவுகளை இடுகின்றன. இதனை நாம் வரவேற்கின்றோம். அண்மைக்காலமாக கல்முனை ஸாஹிறாக்கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை என்ற பெயரில் இணையதளமும், முகநூலும் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையை மிகவும் மோசமான முறையில் விமர்சனம் செய்வதுடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் விமர்சிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக மேற்படி பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை உடனடியாக கலைக்கப்படுவதாகவும் அக்கிளையுடன் எவ்வித தொடர்புகளையும் கொழும்பு வாழ் பழைய மாணவர்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மேற்படி பாடசாலை அதிபர் எம்.எஸ்.முஹம்மட் அறிவித்துள்ளார்.
சட்ட ரீதியற்ற முறையில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை இலச்சினையை பயன்படுத்தி சேறு பூசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top