கல்முனை ஸாஹிறா க்கல்லூரியின் பழைய மாணவரையே

கல்லூரியின் அதிபராக நியமிக்க வேண்டும்

சமூக நல அமைப்புக்கள் கோரிக்கை

(அபூ முஜாஹித்)



வெற்றிடமாகியுள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அதிபர் பதவிக்கு கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரையே அதிபராக நியமிக்க வேண்டுமே தவிர பழைய மாணவர் அல்லாத எவரையும் அதிபராக நியமிக்கக்கூடாது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை ஸாஹிறாக்கல்லூரியின் பாடசாலை கல்விச்சமூகம், பழைய மாணவர்கள், உள்ளுர் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், பள்ளியவால் நிருவாகிகள், சமூக நிறுவனங்கள் உள்ளடங்கிய கூட்டமொன்று அண்மையில் நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டதாக சாய்ந்தமருது அஸ்-ஸூறா கவுன்சில் செயலாளர் எம்..எம்.சதாத் தெரிவித்தார்.
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையானது கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களை முக்கியமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். தற்போது இப்பாடசாலையில் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் குறைவாகவும், வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிகமாகவும் காணப்படுகின்றனர். இந்நிலைமை பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துகிறது.
இந்நிலையில் இப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரை அதிபராக நியமிப்பதன் மூலமே பாடசாலை நடவடிக்கைகளை முன் கொண்டு செல்ல முடியும். பாடசாலை பழைய மாணவர் அல்லாத வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை பாடசாலை அதிபர்களாக நியமிப்பதால் பல்வேறு சமூக பிரச்சினைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு பாடசாலையின் சுமுக நிலை பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளும் பாடசாலை அமைந்துள்ள சொந்தக் கிராமங்களைச் சேர்ந்த அதிபர்களாலேயே நிருவகிக்கப்படுவதனால் அப்பாடசாலைகள் துரித கதியில் முன்னேறி வருகின்றன.
இதனை கருத்திற் கொண்டே சுமார் 50 வருட காலமாக கல்முனை ஸாஹிறா கல்லூரி அதிபர்களாக பாடசாலையின் பழைய மாணவர்கள் அல்லது பாடசாலை அமைந்துள்ள கிராமத்தவர்கள் அதிபர்களாக கடமையாற்ற அனுமதிக்கும் பாரம்பரியம் பேணப்பட்டு வருகிறது.

அவ்வடிப்படையில் தற்போதைய அதிபர் எம்.எஸ்.முஹம்மட் என்பவரை பாடசாலை அதிபராக கடமையாற்ற தேவையான ஒத்துழைப்பை சகலரும் வழங்குவதெனவும் இதனை பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரும் சாய்ந்தமருது அஸ்-ஸூறா கவுன்சில் செயலாளருமான எம்..எம்.சதாத் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top