பொத்துவில் தங்கமகன் அஸ்ரப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.5.1 செக்கன்களில் ஓடி தங்க பதக்கத்தைப் பெற்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பொத்துவில் தாய் பிரசவித்த பரந்துபட்ட ஆளுமைகளுள் பொத்துவில் அஷ்ரப் முதன்மையானவர்.

தனது தீப்பொறி தெறிக்கும் மின்னல் வேக ஓட்டத்தால் நம் இலங்கையையே திரும்பி பார்க்க வைத்து நம் தேசத்திற்காக தொடர்ந்து ஓடியவர்!

பல சர்வதேச அரங்குகளில் நமது தேசத்தை நெஞ்சில் ஏந்தி ஓடி வெற்றிக்கொடி நட்டிய ஒரு அசகாய சூரன்!
பாடசாலைக்காலம் தொட்டே அஷ்ரபுக்குள் அப்படியொரு அசாத்திய திறமை ஆட்கொண்டிருந்தது. சின்ன வயசு முதல் ஓட்டப்போட்டி என்றால் அஷ்ரப் இன்றி நடந்த வரலாறுகள் குறைவு தான்.

கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம், தேசியம் என்று தனது திறமைகளை பல்வேறு எல்லைகளை தாண்டி விஷ்தரித்தார். தொடர்ந்து ஓடினார்.
எத்தனையோ போட்டிகளில் முதலிடம் பெற்றுவந்தும் அடுத்தகட்ட போட்டிகளுக்கு போக முடியாமல் சூழ்நிலைகள் கையறுத்த நிலைமைகள் அஷ்ரபின் ஓட்ட பயணத்தில் கசப்பானவைகள்.

பல மாகாண ரீதியான போட்டிகளில் வென்றும் கூட தேசிய போட்டிக்கு கூட்டிப் போக ஆளில்லாமல் கைவிடப்பட்ட போட்டிகள் என கரைபடிந்த சம்பவங்கள் அஷ்ரபின் வாழ்வில் தாராளம்.
இருந்தும் அஷ்ரப் சற்றும் சளைத்துவிடவில்லை. உடற்பயிற்சிகளோடு சேர்த்து நம்பிக்கை ஹோமோன்களையும் தூண்டிக்கொண்டே இருந்தார்.

21 வயதுற்குற்பட்டவர்களுக்கான தேசிய பாடசாலை மட்ட போட்டி தான் அஷ்ரப் பாடசாலை காலத்தில் இறுதியாக கலந்து கொண்ட ஓட்டப்பந்தயம். ஆனால் அந்த இறுதிப்பந்தயம் தான் அஷ்ரபின் திறமையை உலகறியச் செய்த பந்தயம்.
அன்றிலிருந்து அஷ்ரபின் நாட்டுக்குள்ளான ஓட்டம் நாட்டுக்கு வெளியே புறப்பட தயாரானது.
அஷ்ரபின் திறமைக்கு புதிய அங்கீகாரம் கிடைத்தது.அஷ்ரபின் திறமை சர்வதேச வானில் கொடிகட்டி சஞ்சரிக்க தயாரானது.

இத்தனைக்கும் இடையில் இந்த நாட்டில் ஒரு முஸ்லீமாக பிறந்து இந்த மட்டத்திற்கு வருவதற்கு அஷ்ரபோடு சேர்ந்து நாங்களும் கூட சந்தித்த துரோகங்கள், ஓரவஞ்சனை, வடிகட்டப்பட்ட சுத்தமான துவேஷம் எல்லாம் வேறுகதை!
2014 ம் ஆண்டு இந்தியா கோவாவில் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடைபெற்ற லூசிபோனியா மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்று தங்கமகன் தாயகம் திரும்பிய போது இலங்கை மெய்வல்லுனரே மெய்சிலிர்த்துப்போயினர்.

இத்தனை திறமையோடு இத்தனை நாட்களும் இவன் எங்கிருந்தான் என ஆச்சரியப்பட்டனர்.
அஞ்சல் ஓட்டப்போட்டிகளில் கூட சவால் நிறைந்த அசூர வேகமாக ஓடி முடித்து விட வேண்டிய இறுதி நிலை வீரராக அஷ்ரபை நிலைப்படுத்தியமை எல்லாம் அஷ்ரப் மீது நாடு கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்புக்களாகும்.
அஷ்ரப் அடுத்த கட்ட சர்வதேச அரங்குகளுக்கு தயார்படுத்தப்பட்டார்.

2016 ம் ஆண்டு தெற்காசிய போட்டியில் இலங்கை அஞ்சல் ஓட்டக் குழுவை பொறுப்பெடுத்து மின்னல் வேகத்தில் எல்லைக்கோட்டை தாண்டி கோல்ட் மெடல் வென்றார்.
அதே தெற்காசிய போட்டியில் தன் தாயகத்திற்காக தனித்து நின்று உபாதையை கூட பொருட்படுத்தாமல் 100 மீட்டர் ஓடி முடித்து வெள்ளி வென்று தந்தார்.
ஒரு இளம் நாயகன் இரண்டு மெடல்களோடு நாடு திரும்பிய போது கொடுத்த உற்சாக வரவேற்புகள் சுமாரானவை.
இன்று கிர்கிஸ்தானில் சர்வதேச களம் புகுந்து இன்னுமொரு தங்கம் வென்றிருக்கிறார்.

இப்படியாக பல சர்வதேச களங்களில் தன் ஓடுபலம் கொண்டு வீழ்த்தி வீர நடை போட்டு வந்த எங்களூர் மகன் அஷ்ரப்பை சரித்திரம் எப்பொழுதோ எழுத தொடங்கிவிட்டது!
அஷ்ரபை உங்களுக்கு ஒரு ஓட்டவீரனாக தான் தெரியும். ஆனால் அவர் ஒரு மிடில் ஓடர் சுப்பர்ஹிட் பெட்ஸ்மேன்.
அஷ்ரபுக்குள் ஒளிந்து கிடந்த திறமைகளோ ஒரு பட்டியல்.
தங்கமகனின் ஒவ்வொரு வெற்றியையும் எங்களின் வெற்றியாக எடுத்து அவருக்கு நாங்கள் பிரமாண்டமான வரவேற்புகளை செய்திருக்கிறோம் என்ற திருப்தி எங்களுக்கிருக்கிறது.

தெற்காசிய போட்டியில் வென்று வந்து நின்றதும் கரையோர மாவட்டம் பூராக தங்கமகனை ஊர்வலமாக எடுத்து வந்து அழகு பார்த்த தருணங்கள்,
கோவா வெற்றிக்கு கொடுத்த வெற்றி ஆரவாரங்கள் என எல்லாம் என்றும் அழியாத நெகிழ்ச்சியான சம்பவங்கள்.
அஷ்ரபின் போட்டிகளை டீ.வியில் ஒளிபரப்புகிற பொழுது, நெஞ்சு நிமிர்த்தி எங்கள் மகன் ஓடுவதற்காக சர்வதேச அரங்கில் நிற்கிறான் என்று எங்களுக்குள்ளேயே ஆசுவாசப்பட்டுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் பசுமரத்தாணி!

இப்படி சர்வதேச ஆளுமைகளை உற்பத்தி செய்து கொடுத்த மண்ணின் கதை கேட்டால் நீங்கள் பரிதாபப்படுவீர்கள்.
ஒரு ஒழுங்கான தரமான மைதானம் இல்லாமல் தான் நாங்கள் அஷ்ரபை தயார்படுத்தினோம்!
கிரவல் கற்களுக்குள் ஓடிய கால்கள் தான் இன்று சர்வதேச அரங்கின் காபட்டுக்களில் ஓடுகிறது என்கிற கதை தெரியுமா உங்களுக்கு!

ஒரு தரமான பயிற்றுவிப்பாளர் இன்றி தான் அஷ்ரப் தேசிய அரங்கு நுழைந்தான் என்பது தெரியுமா?!
ஒரு பொது மைதானம் இல்லாமல் தான் அஷ்ரப் தடைகள் தகர்த்தெறிந்து ஓடுகிறான் என்பது தெரியுமா?!
இப்படியாக மறைந்து கிடக்கும் எத்தனை ஆளுமைகள் எங்கள் மண்ணில் கொட்டிக்கிடகின்றன. அத்தனைக்கும் வழி வெட்டிக்கொடுக்க வளங்கள் தான் இல்லை.

கல்வி தொட்டு விளையாட்டு வரை எங்கள் திறைமை வெளிக்கொணர்வுக்கான வளங்கள் ஒன்றைக்கூட தராமல் பசப்பு வார்த்தை கூறி இன்னுமின்னும் பேய்க்காட்ட நினைக்கும் அத்தனை பேருக்கும் நாங்கள் சவால் விடுக்கிறோம்,

நீங்கள் எங்களுக்கெல்லாம் என்னதான் ஓரவஞ்சனை நாடகம் காட்டினாலும் நாங்கள் சற்றும் சளைக்கமாட்டோம். பயணித்துக்கொண்டே இருப்போம்.
இது போன்ற இன்னும்பல அஷ்ரப்களை உருவாக்கிக்கொண்டே இருப்போம்!!
தங்க மகனே நீ வா!
உனை உருவாக்கிவிட்ட உன் மண் உன்னை தொட்டு முத்தமிட காத்திருக்கிறாள்!
-சல்மான் லாபீர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top