போர் நிறுத்தத்தை மீறி சிரியாவில்
துருக்கி போர் விமானங்கள் தாக்குதல்
36 பேர் பலி
சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை மீறிய வகையில் துருக்கி போர் விமானங்கள் இன்று நடத்திய தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் ஜனாதிபதி ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் சண்டையிட்டு வந்த நிலையில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. நிறுத்தியது. இதனால், அரசுப்படையினரின் கை ஓங்கிய நிலையில், கடந்த 18-ம் திகதி முதல் ஜனாதிபதி ஆதரவு படை - ரஷ்யா இணைந்து கிழக்கு கூட்டா பகுதியில் ஆவேச தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவில் அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஐ.நா.சபை ஏற்பாடு செய்தது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சிரியாவின் ஆப்ரின் பகுதியில் துருக்கி ராணுவத்துக்கும், குர்திஷ் போராளிகளுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் எட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 5 மணியளவில் ஆப்ரின் பகுதிக்குள் நுழைந்த துருக்கி நாட்டு போர் விமானங்கள் கப்ர் ஜின்னா பகுதியில் உள்ள ஜனாதிபதிக்கு ஆதரவான போராளிகள் முகாம்களின்மீது சுமார் 5 மணிநேரம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்ததாக சிரியாவின் போர் நிலவரங்களை கண்காணித்து வரும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment