‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி
நடவடிக்கை எடுக்கப்படும்’
முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி!
அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மாலை (03) பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தாமும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி, சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டு பிரதமரிடம், அம்பாறை பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமும், ஒழுங்கும் கேலிக்கூத்தாகி விடும் என்று தெரிவித்து, உடனடியாக இது தொடர்பில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
“அம்பாறை சம்பவம் முஸ்லிம்களை வேதனையடையச் செய்துள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளை தப்பிக்க வைத்திருப்பதால் சிறுபான்மை மக்கள் இப்போது பொலிஸார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறு நாடகம் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான பொலிஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை சமூகம் தமக்குத்தாமே பாதுகாப்பைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தையும், சூழலையும் அரசாங்கம் ஏற்படுத்தி விடுவதாய் அமையும்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது, பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அம்பாறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட விஷேட பொலிஸ் குழு, தமது அறிக்கையை தன்னிடம் கையளித்திருப்பதாக தெரிவித்த பிரதமர், பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபர்களை மீளக் கைது செய்து, உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் அம்பாறைக்கு விஜயம் செய்து பள்ளிவாசலையும், சேதத்துக்குள்ளாக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட வேண்டுமெனவும், அம்பாறை நகருக்குச் செல்லாமல், அந்த மாவட்டத்தில் உள்ள வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டார்.
-ஊடகப்பிரிவு-
0 comments:
Post a Comment