ரஷிய ஜனாதிபதி தேர்தல் - 76.67 சதவீதம் வாக்குகளுடன்
விளாடிமிர் புதின் அபார வெற்றி
ரஷியாவின் ஜனாதிபதியாக நான்காவது முறை பொறுப்பேற்கவுள்ள விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக 76.67 சதவீதம் வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தவிளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடிமிர் சிரினோவ்ஸ்கி (லிபரல் ஜனநாயக கட்சி), கெசனியா சோப்சாக், மேக்சிம் சுரேகின் (ரஷ்ய கம்யூனிஸ்ட்), போரிஸ் டிடோவ் (வளர்ச்சி கட்சி), கிரிகோரி யாவ்லின்ஸ்கி (யப்லோகோ) ஆகியோரும் களத்தில் மோதினர்.
மக்களிடையே வாக்குப்பதிவை ஊக்குவிக்க செல்பி போட்டி, கேரட் பரிசு என பல்வேறு புதிய யுக்திகளை அந்நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில், வாக்குரிமை பெற்றவர்களில் 67 சதவீதம் மக்கள் மட்டுமே தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்திருந்தனர்.
நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி படிப்படியாக முடிவுகள் வெளியாகின. ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதி புதின் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இன்று 98 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 76.67 சதவீதம் வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் பவெல் குருடினின் 11.79 சதவீதம் வாக்குகளை பெற்றார்.
முன்னாள் உளவுத்துறை அதிகாரியான புதின் கடந்த 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை மற்றும் 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஜனாதிபதி பதவியில் உள்ளார். இந்த முறையும் பெற்றுள்ள அவர் வரும் 2024-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். இதன் மூலம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற சிறப்பை புதின் பெறுவார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதின், வாழ்நாள் முழுவதும் ரஷியாவின் ஜனாதிபதியாக ஆட்சி செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
2030-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், நீங்கள் சொல்வது எனக்கு வேடிக்கயாக தெரிகிறது. நான் 100 வயது வரை இந்த பதவியில் அமர்ந்திருக்க வேண்டுமா? முடியாது என்று பதிலளித்துள்ளார்.
0 comments:
Post a Comment