மேடையில் ஆசிரியர்கள் காலில்
விழுந்து வணங்கிய கலெக்டர்
முன்னாள் ஆசிரியர்கள் கண்கலங்கினர்.
   
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேடையில் இருந்த ஆசிரியர்கள் காலில் கலெக்டர் ஒருவர் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இந்தச் சம்பவம் எமது அண்டை நாடான இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
கரூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை சிவில், மெக்கானிக், டெக்ஸ்டைல் பாடப்பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் முன்னாள் மாணவரான திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ட்பட 45 பேரும், அவர்களுக்கு வகுப்பு எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் 8 பேரும் பங்கேற்றனர். 31 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி என்பதால் ஆர்வமுடன் ஒருவரையொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தன்னுடன் படித்த மாணவர் ஒருவர் கலெக்டராக இருப்பதை எண்ணி சக தோழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கலெக்டர் கந்தசாமியும், தான் கலெக்டர் என்பதை மறந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போல நண்பர்களுடன் கலந்துரையாடினார். கல்லூரியையும், வகுப்பறைகளையும் சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர் கல்லூரியில் இருந்து ஓட்டலுக்கு கல்லூரி பஸ்ஸில் நண்பர்களுடன் பயணம் செய்தார். கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனையும் நிகழ்ச்சிக்கு அழைத்து சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி பேசுகையில், ஆசிரியர்களால் நான் இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஆசிரியர்கள் ஏணிகளாக இருந்து நம்மை உயர்த்தி விட்டு அழகு பார்க்கின்றனர். கேட்காமலே வரம் கொடுத்த தெய்வங்கள் இவர்கள். இவர்களுக்கு நான் கைமாறாக என்ன செய்ய முடியும். என்ன செய்தாலும் அது நிலையானதாக இருக்காது என்றவர், திடீரென மேடையில் இருந்த முன்னாள் ஆசிரியர்களை சற்று எழுந்திருக்கும் படி கூறினார். அப்போது மேடையில் சாஷ்டாங்கமாக ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முன்னாள் ஆசிரியர்கள் கண்கலங்கினர்.
கலெக்டரை உடனே எழுமாறு 2 பேர் தூக்கினர். கலெக்டர் கந்தசாமியால் பேச முடியாமல் நா தழுத்தது. அருகில் இருந்த முன்னாள் மாணவரான பொறியாளர் சிவக்குமார் உடனே கலெக்டரை சற்று ஆசுவாசப்படுத்தி அவரது செயலை பாராட்டியும், ஆசிரியர்களை மறக்காமல் இருப்பதை எண்ணி பேசினார்.
ஆசிரியர்களை மறக்காமல் கலெக்டர் கந்தசாமி காலில் விழுந்து வணங்கியது மற்ற முன்னாள் மாணவர்களையும், அரங்கத்தில் இருந்தவர்களையும், ஆசிரியர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top