அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட் பிரதமருடன் சந்திப்பு
கடுமையான தொனியில் விடயங்கள் எடுத்து வைப்பு



சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய கையுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்துள்ளார்.
வௌ்ளிக்கிழமை இரவு நாடு திரும்பியவுடன் தன்னை சந்திக்க வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
கொழும்பு-07ல் உள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் இந்தச் சந்திப்பு வௌ்ளிக்கிழமை 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கடுமையான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளனர்
மேலும் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார், சட்டத்திலே வேண்டுமென்றே ஓட்டைகளை ஏற்படுத்தி குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர், இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என்று பிரதமரிடம் தெரிவித்தனர்.
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சதிகார செயல்களுக்கு அம்பாறை பொலிஸார் பக்கபலமாக இருந்தது மாத்திரமின்றி, முஸ்லிம்களை பாரபட்சமாகவும் நடாத்தியுள்ளனர். பொலிஸார் மீது இப்போது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகின்றது. இது நல்லாட்சிக்கு நல்லதல்லஎன்று அமைச்சர்கள் ஆத்திரத்துடன் கூறிய போது பிரதமர் தலையசைத்து அதனை ஆமோதித்துள்ளார்.

அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில், பொலிஸார் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடத்தி, பொலிஸார் மற்றும் நாசகாரச் செயலில் ஈடுபட்டோர், இதன் பின்னணியில் இயங்கியோர் என அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இந்த விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதமர், இது தொடர்பில் இன்று 03ம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மீண்டுமொரு சந்திப்பொன்றுக்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top