அரசாங்கத்திற்கு மிக விரைவில்
அதிர்ச்சி வைத்தியம் காத்திருப்பதாக
பிரதி அமைச்சர் எச் எம்.எம்.ஹரீஸ் எச்சரிக்கை!


அரசாங்கத்திற்கு விரைவில் அதிர்ச்சிவைத்தியம் காத்திருப்பதாக விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச் எம்.எம்.ஹரீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்து, நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு கொடுமை செய்துவிட்டதாக கொந்தளித்துள்ள பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ், மிகவிரைவில் இந்த அரசாங்கத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
இவ் விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் எச் எம்.எம்.ஹரீஸ்,
அம்பாறையில் அதிகாரமிக்க சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பொலிசாரின் நெறிப்படுத்தலின் கீழ், அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய பௌத்த சிங்கள இனவாதிகள் நேற்று (02) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாட்சியை நம்பிய, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே இதனை நோக்குகிறேன்.
அம்பாறை மாவட்ட தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் காணப்பட்டனர். எனினும் ஒரு சிறிய இனவாத கூட்டத்தை திருப்திபடுத்துவதற்காக முஸ்லிம்களுக்கு கொடுமைசெய்து, பள்ளிவாசல் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் மறைகரமாக நின்று விடுதலை செய்துள்ளது.
முஸ்லிம்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. மிகவிரைவில் அரசாங்கம் இதன் பயனை நுகரும். நாம் அரசாங்கத்திற்கு நிச்சயம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம்.

எனது மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்களை நானும், பள்ளிவாசல் நிர்வாகங்களும் பொறுமைபடுத்தி வைத்திருக்கிறோம்.
ஆயுதங்களின் முன்னால் கூட அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சப் போவதில்லை.
இன்றை நவீன உலகில் சீ.சீ.டி.வீ. கமரா துணையுடன் பள்ளிவாசலை தாக்கியவர்களை மிக இலகுவில் கைது செய்திருக்கலாம். கைது செய்தவர்களை சிறையில் அடைத்திருக்கலாம். எனினும் அவர்களை சிறை வைக்காது சுதந்திரப் பறவைகளாக பறக்கவிட்டுள்ளனர்.
தற்போதை நல்லாட்சி அரசாங்கத்தை பௌத்தசிங்கள இனவாதிகளே வழிநடத்துகின்றனர். அதனால்தான் முஸ்லிம் விவகாரங்கள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன. எனது கட்சியின் ஏனைய எம்.பி.க்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைவில் அறிவிப்போம்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர். அவர்களின் ஆவேசத்தில் நியாயமுள்ளது. அதனை தான் புரிந்துகொள்வதாகவும் பிரதியமைச்சர் ஹரீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு ரணிலின் ஆட்சியின் போது வாழைச்சேனையில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களின் சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்திலும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதுபோன்ற எச்சரிக்கையொன்றை அரசாங்கத்துக்கு விடுத்திருந்தார்.
அதன் பின்னர் ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், அதாவுல்லாஹ் போன்றோர் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறி தேசிய காங்கிரஸை ஆரம்பித்திருந்தனர். அத்துடன் அரசாங்கத்தை விட்டும் வெளியேறினர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top