அம்பாறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
‘பீ’ அறிக்கை பொய்
அம்பாறையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பில், சட்டத்தை அமுல்படுத்தும்போது குறைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல, இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள “பி” அறிக்கை பொய்யானதாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளதென, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தை, பக்கச்சார்பின்றி மற்றும் நியாயமான முறையில், முறையாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தல் மற்றும் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்படி அமைச்சு முன்னெடுத்துள்ளது.
அதேபோல, சேதத்துக்கு உள்ளாக்கப்பட்ட தனியார் சொத்துகளுக்காக, கூடிய விரைவில் நட்டஈட்டை வழங்குவதற்கும், சேதத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசலை புனரமைப்பதற்குமான நட்டஈட்டை விரைவில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் இடம்பெற்ற, அந்தப் பதற்றமான நிலைமையின் போது, சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக, பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட, வண. தேரர்கள், முஸ்லிம் மௌலவிகள் உள்ளிட்ட மதத்தலைவர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய சகல இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கின்றோம் என்றும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய சகலருக்கு எதிராகவும், பாரபட்சமற்ற ரீதியில் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment