நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி
என்ற கருப்பொருளில்
96வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு
மட்டக்களப்பில் கொண்டாட ஏற்பாடு

சர்வதேச கூட்டுறவு தின  கொண்டாட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக நடாத்தப்படவுள்ளன.
இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில் கொண்டாடப்படுவதற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது, 
இலங்கை கூட்டுறவுச் சபையில் பல புதிய அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றன. பிராந்திய கூட்டுறவு உறுப்பினர்களை தமது சொந்த இடங்களில் சந்திக்கின்ற நேரம் இதுவாகும்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புடன் கடந்த ஆண்டு 95வது சர்வதேச கூட்டுறவு தினம் குருநாகலில் வெற்றிகரமாக நடைபெற்றது.  இயற்கை வளங்கள் மற்றும் வளங்களை மதிப்பிடும் அதே வேளையில், வெற்றிகரமான வணிகங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக, கூட்டுறவுத் திறனாளர்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டுநிலையான நுகர்வு மற்றும் உற்பத்திஎன்ற கருப்பொருளில் இவ்வாண்டு சர்வதேச கூட்டுறவுதின நிகழ்வுகள் நடைபெறும்.
இலங்கையின் கூட்டுறவுத்துறை, நமது நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிகவும் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. அத்துடன் பன்முகப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகவும், சமூக நடவடிக்கைகளில் ஆர்வங்காட்டக் கூடியதாகவும் அந்தத் துறை இயங்கி வருகின்றது. விவசாயம், காப்புறுதி, நுகர்வோரின் பாவனைப் பொருட்கள், மீன்பிடித் தொழில், வங்கி, மருத்துவம், ஆடை உற்பத்தி, போக்குவரத்து ஆகியவற்றுக்கு கூட்டுறவுத் துறை உத்வேகம் வழங்கி வருகின்றது.
மக்கள் வாழ்வுடன் தொடர்புடைய, மக்களுக்குச் சிறந்த பயனளிக்கக் கூடிய இந்தத் துறையில், நமது இளைஞர்கள் ஆர்வங்காட்டத் தயங்குகின்றனர். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களையும் கூட்டுறவுத் துறையில் உள்வாங்குவதன் மூலமே, இந்தத் துறையை பலமான துறையாக கட்டியெழுப்ப முடியும் என்பதே எனது கருத்து என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மக்களுக்கு பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு கூட்டுறவுத்துறை மிகுந்த உதவிகளை வழங்கி வருகிறது.
இலங்கையின் கூட்டுறவுத் துறைக்கு நீண்டகால வரலாறு உண்டெனினும், 1970ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியிலேயே கூட்டுறவுத் துறை புத்துயிர் அடையத் தொடங்கியது.
கூட்டுறவுத் துறை என்பது மக்களுடன் தொடர்புபட்ட ஓர் அரிய துறையாக உள்ளபோதும், அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவையும் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூட்டுறவுத்துறை வளர்ச்சி பெற்று வருவதை நாம் மறுக்க முடியாது.
கூட்டுறவுக் சங்கங்கள் மக்களுக்கு நன்மையளிக்க வேண்டும். அவர்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கக் கூடிய முறையான கட்டமைப்புக்களை பேண வேண்டும். குறிப்பாக, நியாய விலையில் பொருட்களை வழங்கக் கூடிய அமைப்பாக அந்தச் சங்கங்கள் தொழிற்பட வேண்டும். எனவேதான் இந்தத் துறையில் ஈடுபடுவோர்க்கு கடன்களையும், விஷேட சலுகைகளையும் வழங்குகின்றது. அண்மைக் காலங்களில்கோப் சிட்டிஎன்ற திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளகோப்பெட்என்ற நிறுவனம் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக விளங்குகின்றது.
கூட்டுறவுத்துறையை பாராட்டி நினைவுகூறும் நோக்கில், சர்வதேச கூட்டுறவு ஸ்தாபனம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமையை சர்வதேச கூட்டுறவு தினமாக பிரகடனப்படுத்தியது. 1922ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு தினம் முதல் தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top