'நாங்கள் உயிருடன் திரும்பி வந்தது அதிசயமான சம்பவம்'
குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் தெரிவிப்பு

தாய்லாந்தில் வெள்ளம் புகுந்த குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நேற்றுமுன்தினம் வீடு திரும்பியிருந்தனர்.
'குகைக்குள் இருந்து காப்பாற்றப்பட்டமை, ஓர் அதிசயமான சம்பவம்' என்று அவர்கள் பிரமிப்புடன் கூறினர்.
தாய்லாந்தின் 'சியாங் ராய்' பகுதியிலுள்ள குகையைப் பார்வையிட, 'வைல்ட் போர்ஸ்' என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின் பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ஆம் திகதி அழைத்துச் சென்றார்.
அப்போது, திடீரென பெய்த பெருமழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து, அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடத்தை சர்வதேச மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர்.
9 நாட்கள் வரை உணவின்றித் தவித்த அவர்கள், குகைக்குள் புகுந்த வெள்ளநீரைக் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதனால், அவர்களின் உடல் மிகவும் மெலிந்து விட்டது. ஒரு வழியாக 17 நாட்களுக்குப் பிறகு அவர்களை சர்வதேச மீட்புக் குழுவினர் கடந்த 10-ஆம் திகதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவர்கள் புதன்கிழமை வீடு திரும்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர்களை உறவினர்களும், பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு வரவேற்றனர்.

குகையில் இருந்து மீட்கப்பட்ட அனுபவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதிர்ச்சியூட்டக் கூடிய, தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்குமாறு செய்தியாளர்களை தாய்லாந்து இராணுவத் தளபதி ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
அதன்படி, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்தச் சிறுவர்கள் பொறுமையாகப் பதிலளித்தனர்.
அப்போது "குகையில் இருந்து உயிர் பிழைத்து வந்தது, அதிசயமான சம்பவம்" என்று அதுல் சாம்-ஆன் என்ற சிறுவன் கூறினான்.
இது தனது வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்று மீட்கப்பட்ட டாம் என்ற சிறுவனின் பாட்டி கூறியுள்ளார்.
தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தாங்கள் சந்தித்த இன்னல்களையும், சுழியோடும் வீரர்கள் தங்களை கண்டறிந்த 'அற்புத தருணம்' குறித்தும் முதல் முறையாக மனம் திறந்து பேசினர்.
ஆங்கிலம் பேசத் தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் சுழியோடும் நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் 'ஹலோ' மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளான்.
பாறைகளில் வடிந்த நீரை மட்டும் அருந்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் குகைக்குள் தங்கியிருந்த அக்குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவன், "நீர் தூய்மையாக இருந்தது. உணவு எங்களிடம் இல்லை" என்று கூறியுள்ளான்.
"இந்த இன்னல் மிக்க அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வோம்" என்று அந்த சிறுவர்களில் சிலர் கூறினார்கள். இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் என்றும் எனது வாழ்வை இயன்றவரை முழுமையாக இனி வாழ்வேன் என்றும் ஒரு சிறுவன் கூறியுள்ளான்.

அமைதியாகவும் வலிமையாகவும் இருக்க இந்த அனுபவம் கற்றுக் கொடுத்துள்ளது என்று இன்னொரு சிறுவன் தெரிவித்துள்ளான்.
"இதுதான் அந்த சிறுவர்களின் ஒரே அதிகாரபூர்வ செய்தியாளர் சந்திப்பு" என்று கூறியுள்ள சியாங் ராய் மாகாண ஆளுநர் பிரசோன் பிராஸ்துகான், இனிமேல் அவர்கள் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அந்த சிறுவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் முன்கூட்டியே அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. அவற்றை ஒரு குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஒருவர் ஆராய்ந்து தெரிவு செய்தார். அந்த சிறுவர்களுக்கு மனஅழுத்தம் எதையும் உண்டாக்காது என்று கருதப்பட்ட அந்த கேள்விகள் மட்டுமே அவர்களிடம் கேட்கப்பட்டன.
அந்த சிறுவர்களை சில காலம் மட்டுமே புத்த துறவிகளாக்கும் திட்டமும் உள்ளது. மோசமான அனுபவங்களுக்கு உள்ளன ஆண்களை சில காலம் துறவிகளாக்கும் வழக்கம் தாய்லாந்தில் உள்ளது.
அந்த சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். அவர்களை சைக்கிளில் கால்பந்து மைதானம் செல்ல துணை பயிற்சியாளர் எக்கபோல் கூறியுள்ளார். அவர்கள் குகையை நோக்கி செல்வதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
அன்று சிறுவர்களில் ஒருவரான பீராபத் 'நைட்' சோம்பியெங்ஜாயின் பிறந்த நாள். அன்று அவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் உணவு விடுதியில் 700 பாட் அளவுக்கு பணத்தை செலவிட்டுள்ளனர். அது அப்பகுதியில் ஒரு பெரிய தொகை.
எக்கபோல் மிகவும் அமைதியானவர் என்றும் அந்த குகைக்குள் செல்வது அந்த சிறுவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்களது பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங்.
குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.
"நீங்கள் வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்" என்ற கேள்விக்கு, பலர் தாங்கள் கால்பந்தாட்ட வீரர்களாக ஆகப்போகிறோம் எனவும் ஒருவர் மட்டும் நீர்முழ்கி நீச்சல் வீராக போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அந்த உரையாடலில் மீட்பு பணியில் இறந்த சமன் குணன் பற்றி பேசிய ஒரு சிறுவன் "அவர் என் தந்தை மாதிரி. அவரை மறக்க மாட்டோம் நினைவிருக்கும்வரை" என உருக்கமாகப் பேசியுள்ளான்.
"உங்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை எனறால் என்ன செய்திருப்பீர்கள்" என்ற கேள்விக்கு, "நாங்கள் நீர் வற்றியவுடன் வெளியே வந்து விடலாம், இல்லையெனில் அனைவரும் ஒன்றுசேர்ந்து குகையை உடைத்து வெளியே வந்துவிடலாம் என யோசித்து வைத்திருந்தோம்" எனக் கூறியுள்ளனர்.
"நீங்கள் குகைக்குப் போகிறீர்கள் என்பது உங்கள் பெற்றோருக்கு முன்னரே தெரியுமா" என்ற கேள்விக்கு, பலர் "தெரியாது நாங்கள் கால்பந்தாட்ட பயிற்சிக்கு செல்கிறோம் என்றே சொல்லிவிட்டு சென்றோம்" என்று தெரிவித்துள்ளனர்.
சிலர் "சொல்லிவிட்டுத்தான் சென்றோம். அது ஆபத்தான இடம் என்று வீட்டில் அறிவுறுத்தினார்கள்" எனக் கூறினர். "இனி குகைக்குச் செல்ல விரும்புகிறீர்களா" என்ற கேள்விக்கு, பலர் "ஆம் பாதுகாப்புடன் செல்ல விருப்பம் இருக்கிறது" என்றனர். சிலர் "இனி குகை பக்கமே செல்லமாட்டோம்" எனக் கூறியுள்ளனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top