ஓதுவோம் வாருங்கள், தீனோரே நியாயமா?,
வாழ வாழ நல்ல வழிகள் உண்டு இஸ்லாமிய பாடல்களை
இசை முரசு நாகூர் ஹனீபாவுடன் பாடிய
பழம்பெரும் பாடகி கே.ராணி காலமானார்
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடியதுடன் இசை முரசு நாகூர் ஹனீபாவுடன் இணைந்து ஓதுவோம் வாருங்கள், தீனோரே நியாயமா?, வாழ வாழ நல்ல வழிகள் உண்டு உள்ளிட்ட இஸ்லாமிய
பாடல்களை பாடிய பழம்பெரும் பாடகி கே.ராணி உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 75 . இலங்கையின் தேசிய கீதமும் இவரால் பாடப்பட்டதாகும்
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கே.ராணி. கடந்த 1943-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 8-வது வயதிலேயே சங்கீதத்தில் சிறந்து விளங்கினார்.
தமிழில் தேவதாஸ், கல்யாணி, கல்யாணம் பண்ணி பார், மோகன சுந்தரம், தர்ம தேவதை, சிங்காரி, எம்.ஜி.ஆர். நடித்த ஜெனோவா, திரும்பி பார், சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி, நல்ல காலம், பணம் படுத்தும் பாடு, குணசுந்தரி, கதாநாயகி, காவேரி, , அமர கீதம், மர்ம வீரன், காலம் மாறி போச்சு, பாசவலை, படித்த பெண், அலாவுதீனும் அற்புத விளக்கும், எங்கள் வீட்டு மகாலட்சுமி, பானை பிடித்தவள் பாக்கியசாலி, லவகுசா உள்ளிட்ட பல படங்களில் இவர் கதாநாயகியர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
1965-ம் ஆண்டுக்கு பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் திரைப்படங்களில் பாடாமல் இருந்த ராணி பல்வேறு இசை கச்சேரிகளை நடத்தி வந்தார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது குரலில் மகிழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் 'இன்னிசை ராணி’ என்று பட்டமளித்து கெளரவித்தார்.
ராணி கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத் கல்யாண் நகரில் உள்ள தனது
மகள் விஜயாவின் வீட்டில் வசித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று ஏற்பட்ட
உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் உடலுக்கு
திரையுலகத்தினர் மற்றும் இசைத்துறையை சேர்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment