முன்னாள் இந்திய பிரதமர்
அடல் பிகாரி வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான வாஜ்பாய் காலமானார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதியினருக்கு டிசம்பர் 25, 1924 அன்று பிறந்தார். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற வாஜ்பாய் 1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19-ஆம் திகதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2009-ம் ஆண்டில் பொது வாழ்க்கையிலிருந்து வாஜ்பாய் விலகினார்.
இந்நிலையில் வயது மூப்பினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11ம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோயினால் அவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வாஜ்பாயை மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து நேற்று இரவு வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. சுவாசக் கருவி உதவியுடன் வாஜ்பாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆக.18, 19-ம் திகதிகளில் நடைபெறவிருந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனை வாஜ்பாய் உடல்நிலை குறித்து புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று தெரிவித்திருந்தது. உயிர்காக்கும் உபகரணங்கள் கொண்டு வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை புதிய அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து 2 மணியளவில் பிரதமர் மோடி, மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று
( 16ம் திகதி) மாலை 5. 05 மணியளவில் .வாஜ்பாய் உயிர் பிரிந்தது.
வாஜ்பாயின் சிறப்புகள்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லக்ஷ்மிபாய் கல்லூரியில்தான் அவர் முதுகலை பட்டத்தை முடித்தார்.
இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார்.
தந்தையை போன்று வாஜ்பாயும் கவிப் புலமை கொண்டவர். தேச பற்று மிகுந்த கவிதைகளை வாஜ்பாய் படைத்துள்ளார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போதே அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது.
1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.
வாஜ்பாய் பேச்சாற்றல் மிக்கவர். ஒருமுறை வாஜ்பாய் பேச்சை கண்டு முன்னாள் பிரதமர் நேருவே வியந்துபோனார்.
வாஜ்பாயின் பேச்சு திறமை மற்றும் நிர்வாகத் திறமை ஜன சங்கத்தில் அவர் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தது.
நெருக்கடி காலத்தில் சிறைக்கு சென்றவர் வாஜ்பாய் (1975-1977)
1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19-ஆம் திகதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்குவழிச் சாலைகளைாக மாற்றியவர் வாஜ்பாய்.
மக்களவை எம்.பியாக 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபாவிற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment