கற்பித்தல் செயற்பாடுகளின்போது,
மாணவர்களின் வீட்டுச் சூழல் தொடர்பிலும்
ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

அரச பாடசாலைகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களின் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு 02, ரி.பி. ஜாயா ஸாஹிறாக்  கல்லூரியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (04) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் கூறியதாவது;

ரி.பி. என்ற நாமம் இலங்கையின் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமாக பங்காற்றியவர்களில் ஒருவராக கருதப்படுவதோடு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த ஒருவருமாவார். கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் ஆரம்பகால அதிபராக கடமையாற்றிய அவர், ஆற்றிய கல்விச் சேவை அவர் அரசியலில் அறிமுகமாவதற்கும் ஏதுவாக இருந்தது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது ஒரு கஷ்டமான விடயம். இந்த சவாலை பாடசாலையின் அதிபர், பழைய மாணவர் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதற்கு இந்த கட்டிடத் திறப்புவிழா ஒரு சாட்சியாக உள்ளது.


தாய் மொழி மூலம் கல்வி கற்பது என்பது அத்தியவசியமானது. ஆரம்பக் கல்வி என்பது, உளவியல் ரீதியான மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அடிப்படை அம்சமாகும். இதனால்தான், தேசிய பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளை ஆங்கிலத்தில் ஆரம்பிப்பதில்லை. ஆனால், ஆங்கில மோகம் என்பது இப்போது எல்லோரின் மத்தியிலும் இருக்கிறது.

வருமானம் குறைந்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்கவேண்டும் என்பதற்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்க்கின்றனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

கொழும்பில் அரசாங்க பாடசாலைகளை விட, ஆங்கில மொழியில் கல்வி போதிக்கின்ற சர்வதேச பாடசாலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அரச பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவாக இருக்குமோ என்ற யூகத்தில், மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பாடசாலைகளில் பெளதீக வளங்களை அதிகரிப்பதுடன், கற்பித்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்தும் தீவிரமாக சிந்திக்கவேண்டும். கற்பித்தல் செயற்பாடுகளின்போது, மாணவர்களில் வீட்டுச் சூழல் தொடர்பிலும் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும். பெற்றோர்களுடன் சினேகபூர்வமாக அணுகித்தான் இந்த விடயத்தை கையாளவேண்டும்.

ஆசிரியர்கள் மீதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் இவற்றை ஒரு சுமையாக சுமத்தவில்லை. வெளிநாடுகளில் நடப்பதை அடிப்படையாக வைத்து கற்பித்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்து, நவீன உபாயங்களை உட்புகுத்தித்தான் இப்படியான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவேண்டும் இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

இக்கட்டிட திறப்பு விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண சபை உறுப்பினர் நெளசர் பெளசி மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top