இஸ்லாமிய வரையறைகளைப் பேணி
விடுமுறை காலத்தைக் கழிப்போம்!
ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்




ஏப்ரல் மாத நடுப் பகுதியில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளிலும் பெரும்பாலான மத்ரஸாக்களிலும் விடுமுறை வழங்கப்பட்டுவருகிது. இவ்வாறு விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் பயணங்கள் மேற்கொண்டு ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தரிசிப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல.

எனினும், இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி செயற்படுவது அவசியம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஆரோக்கியமும் ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகள். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகள் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர். 1.ஆரோக்கியம். 2. ஓய்வுஎன இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி: 6412)

எம்மில் பலர் இவ்விரு அருள்களை பெரியளவில் அலட்டிக் கொள்வதில்லை. அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்வதுமில்லை. இதனால் எம்மில் பலர்  வாழ்வில் பல்வேறு கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர்.           

ஏப்ரல் மாத நடுப் பகுதியில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளிலும் பெரும்பாலான மத்ரஸாக்களிலும் விடுமுறை வழங்கப்படுவது வழமை. அந்த வகையில் சுமார் மூன்றரை மாதங்கள் தொடராக கல்விப் பணயத்தில் ஈடுபட்டு வந்த எமது மாணவர்கள் விடுமுறை பெறும் காலம் இதுவாகும். இக்காலப் பகுதியில் எம்மில் சிலர் தமது பிள்ளைகளுடன் குடும்பம் சகிதம் உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் பயணங்கள் மேற்கொண்டு ஊர்களையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தரிசிப்பது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானதல்ல. எனினும், இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி செயற்படுவது அவசியம்.

ஆடை அணிவது முதல் எமது உணவு, குடிபானங்கள் ஆகிய அனைத்திலும் ஹலால்- ஹராம் வரையறைகளை பேணி நடந்து கொள்ள வேண்டும். ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ளுதல், போதைப்பொருட்களை பாவித்தல், வீதி ஒழுங்குகளை மீறி நெரிசலை ஏற்படுத்துதல், பிறருக்கு இடையூறு விளைவித்தல், அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல்முதலான விடயங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த விடுமுறை காலத்தில் வழமை போன்று உரிய நேரத்தில் தொழுது, சன்மார்க்க விளக்கங்களைக் கேட்டு, நற்பணிகளில் கால நேரத்தை கழிக்குமாறும், சுற்றுலா செல்வோர் இஸ்லாமிய வரையறைகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பேணி நாட்டு மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்படுமாறும் முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழு  வேண்டுகோள் விடுக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top