பாடசாலை மாணவர்களுக்கு 
பாசத்தை காட்டி
சோகத்தில் வீழ்த்திய குரங்கு

இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை குரங்கு ஒன்றின் பரிதாப மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது வெங்கலம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்த பாடசாலைக்கு கடந்த ஒன்றரை வருடமாக பக்கத்திலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து லங்கூர் வகை குரங்கு ஒன்று வழக்கமாக வந்துள்ளது. குரங்கு மாணவர்களிடம் சகஜமாக பழகி அவர்களை குஷிபடுத்தியது. பாடசாலையில் நடக்கும் பிரார்த்தனையில் கூட அது கலந்து கொண்டு வந்துள்ளது. வகுப்பு நேரத்தில் மட்டுமின்றி மதிய உணவு வேளையிலும் மாணவர்களிடம் தங்கி அவர்கள் வழங்கும் உணவை உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தது.

முதலில் குரங்கினை விரட்ட பாடசாலை நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மாணவர்களுக்கு குரங்கினால் பாதிப்பு ஏற்படாத வகையில் குரங்கு நடந்து கொண்டதால், அவர்கள் குரங்கினை விரட்டும் முயற்சியை கைவிட்டனர்.

பாசத்துடன் குரங்கு பழகி வந்ததால் மாணவர்கள் அதற்கு லட்சுமி என்று பெயரிட்டனர். குரங்கின் தினசரி வருகையால் அப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தினந்தோறும் 100 சதவீதமாக இருந்துள்ளதாக அப்பாடசாலை தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுடன் ஒன்றாக பழகி வந்த குரங்கு சனிக்கிழமையன்று (செப்.7) தெருநாய்களால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தது. தங்களுடன் பாசத்துடன் பழகி வந்த குரங்கு தீடீரென்று மரணம் அடைந்ததால் அப்பாடசாலை மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தங்கள் நண்பன் மறைந்து போனது போல் கதறி அழுதனர். லட்சுமி இறந்ததால் பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, குரங்கினை பாடசாலைக்கு அருகே அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் குரஙகின் மீது காட்டிய பாசம் அப்பகுதி மக்களை நெகிழச் செய்துள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top