வெளியார் தலையீட்டை ஏற்கமுடியாது
ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி
ஏ.எல்.ஏ. அஸீஸ் திட்டவட்டம்



உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.
                                                                                                                                                    
ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து, இணை அனுசரணை நாடுகளும், பல அனைத்துலக அமைப்புகளும் கவலை வெளியிட்டிருந்தன.

குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டது, நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை பாதிக்கும் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் பேரவையில் பதிலளித்து பேசினார்.

உள்ளக நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வகையில், இலங்கையின் பொது சேவை பதவிஉயர்வுகள், முடிவுகளில், வெளிப்புற சக்திகளின் தலையீடுகள் தேவையற்றவை. ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

அண்மையில் இராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, ஜனாதிபதியின் இறையாண்மைக்குட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சில இரு தரப்பு பங்காளிகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் இந்த நியமனம் குறித்து கவலைக்குரிய நிலைப்பாட்டை எழுப்புவது வருந்தத்தக்கது. இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானதுஎன்றும் ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஸீஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top