வறுமையை ஒழித்து சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு ஒன்றுபட வேண்டும்

போரா மாநாட்டில் ஜனாதிபதி


வறுமையை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இனம், மதம், சமயம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றுபடுவதே இன்று நாட்டின் தேவையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதுவே முஹம்மத் நபிவர்களின் போதனையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். போரா சமூகத்தினரின் சர்வதேச மாநாட்டிற்கு தனது நல்லாசிகளை தெரிவித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

போரா சமூகத்தினரது சர்வதேச மாநாடு அண்மையில் பம்பலப்பிட்டியிலுள்ள போரா சமூகத்தின் பிரதான பள்ளியை மையப்படுத்தி ஆரம்பமானதுடன், 10 நாட்கள் தொடர்ந்து இடம்பெறும் இம்மாநாட்டின் 04 ஆவது தினமான இன்றைய தினம் மாநாட்டு மண்டபத்திற்குச் சென்ற ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொண்டுள்ளவர்களுக்கு தனது நல்லாசிகளை தெரிவித்துள்ளார்.



சமாதானத்திற்காக அர்ப்பணித்த சமூகத்தினரான போராக்களின் இம்மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுவது நாட்டுக்கு கௌரவமாகும் என்றும் அது குறித்து தனது நன்றியை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளதுஎன்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த 21,000 போரா சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் இம்மாநாடு இலங்கையில் நடைபெறுவதுடன், வெளிநாடுகளிலிருந்து சுமார் 18,500 போராக்கள் கலந்துகொண்டுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த சுமார் 2,500 போரா சமூகத்தினரும் பங்கு பற்றியிருக்கின்றனர்.

அனைத்து இனங்கள், சமயங்களுக்கு மத்தியில் சமாதானத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பி இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பலம் சேர்ப்பது தீவிரவாதத்தை நிராகரித்து சமாதானத்திற்கு அர்ப்பணிப்புள்ள போராக்களின் இந்த மாநாட்டின் நோக்கமாகும் என்பதுடன், இலங்கை சுற்றுலா துறைக்கும் வர்த்தகத்திற்கும் பொருத்தமான நாடு என்பதை எடுத்துக் கூறுவதும் இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

இந்த மாநாட்டின் மூலம் இலங்கைக்கு சுமார் 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது போன்றதொரு மாநாடு 2007ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றதுடன், அம்மாநாட்டில் 7,000 பேர் பங்குபற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.  






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top