வவுனியாவில் 147 தபால் மூல
வாக்களிப்பு நிலையங்கள்!
மாவட்ட அரசாங்க அதிபர்
ஐ.எம். ஹனீபா தெரிவிப்பு
வவுனியா மாவட்டத்தில் 147 வாக்களிப்பு நிலையங்களில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறுவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் 5038 அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றது.
அதில் 4140 அஞ்சல் வாக்காளர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் வெளிமாவட்டத்திற்கு 147 அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 147 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மூலம் 147 வாக்கெடுப்பு நிலையங்களில் இவ் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவற்றுக்காக 47 உதவி தெரிவு அத்தாட்சி அலுவலர்களும், 142 தேர்தல் கண்காணிப்பாளர்களும் ஒவ்வொரு நிலையங்களிலும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அஞ்சல் வாக்களிப்பு இன்றும் இடம்பெறவுள்ளது. அத்துடன் வாக்களிக்க தவறியவர்கள் வருகின்ற 7ம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து வாக்களிக்க முடியும்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்வரும் 4 மற்றும் 5ம் திகதி அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment