`எக்காரணம் கொண்டும் குழந்தையை
மீட்கும் திட்டம் கைவிடப்படாது!
' - தமிழக அரசு

நடுக்காட்டுப்பட்டியில் துளையிட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஆட்சியருடன் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``பாறைகளை அடுத்து கரிசல் மண் தென்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், குழந்தையை மீட்பதற்காகத் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். 98 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது'' என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை .மா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். சுர்ஜித்தின் பெற்றோர்களை சந்தித்தும் அவர் ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஜி.கே.வாசன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறுகையில், ``ஆறுதல் கூறும் நிலையில் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இல்லை. சிறுவனுக்கு சாதகமான சூழலை இறைவன்தான் ஏற்படுத்த வேண்டும். பாறைகள் கடினமாக இருப்பதால், துளையிடப்படும் பணி தாமதமாகிறது. முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

அப்போது, மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய விஜயபாஸ்கர், ``துளையிடும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், இவ்வளவு பெரிய இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்தும், துளையிடும் பணி சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள் அனைத்தும் உடைந்துபோகின்றன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததில்லை.

மத்திய அரசு சார்பில் ஐஐடி பேராசிரியர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் வந்து மண் பரிசோதனை மேற்கொண்டனர். அதேபோல், கூகுள் உதவியுடன் இந்தப் பகுதியின் நிலவியல் அமைப்பு குறித்து ஆய்வு செய்தோம். தொடர்ந்து பாறைகளே இருக்கிறது. அந்தப் பாறைகள் இவ்வளவு கடினமாக இருப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை'' என்று கூறியுள்ளார்.

63 மணி நேரத்தைத் தாண்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தற்போதைய முறை பலனளிக்குமா என்பது நிச்சயம் கேள்விக்குறியே. ஏனென்றால், நம்முடைய திட்டத்தின் படி 90 அடி ஆழ குழி தோண்டியபின்னர் தற்போதைய நிலையில், பக்கவாட்டுப் பகுதியில் கிடைமட்டமாகக் குழி தோண்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பாறைகள் கடினமாக இருப்பதால், நம்மால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை.

ராமநாதபுரத்தில் இருந்து மூன்று மாவட்டங்கள் வழியாக அதிகத் திறன் கொண்ட இந்த இயந்திரத்தை நாம் வரவழைத்தோம். அதை செயல்படுத்த கிட்டத்தட்ட 4 முதல் 5 மணி நேரம் பிடித்தது. இரவு 11 மணிக்குப் பின்னரே அதன் மூலம் பணியைத் தொடங்கினோம். அப்போது துணை முதல்வரும் சம்பவ இடத்தில் இருந்தார். முதலில் 7, 8 அடி வேகமாகச் சென்றது. அதன்பின்னர், இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் இருந்தன.

குழந்தை மீது ஒரு இன்ச் அளவுக்கு மண் துகள்கள் மூடியிருக்கின்றன. இதனால், குழந்தை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்குப் பின்னர், குழந்தையிடமிருந்து எந்த அசைவையும் பார்க்க முடியவில்லை. சுவாசத்தையும் உணரமுடியவில்லை என்பதை ஏற்கெனவே நான் விளக்கியிருக்கிறேன். அதேநிலைதான் தற்போதும் நீடிக்கிறது. இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாற்றுவழிகள் குறித்து துணை முதல்வர், மாவட்ட நிர்வாகம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம். ரிக் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஏறக்குறைய 18 மாநிலங்களில் இதுபோன்ற சூழல்களில் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வடும் 8 குழுக்களிடம் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். அவர்கள் அனைவரையும் இன்று வரவழைத்திருக்கிறோம். `நீங்கள் அனைவரும் இணைந்து ஆலோசித்து குழந்தையை எப்படி மீட்கலாம் என்று சொல்லுங்கள்' என அவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம். இறுதியாக ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தோண்டுவதற்காக முதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. தற்போது பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த ரிக் இயந்திரம் ஜெர்மனியில் தயாரானது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம், .என்.ஜி.சி மற்றும் எல் அண்ட் டி நிறுவனம், அரசு உயரதிகாரிகள் என அனைவருமே இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்'' என்றும் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்றில் சிறுவன் சுர்ஜித், கடந்த 25ம் திகதி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தன்னார்வ குழுக்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி மீட்கும் பணி பலனளிக்காமல் போகவே, ஆழ்துளைக் கிணறு அருகே மற்றொரு குழி தோண்டி அதன்மூலம் மீட்கும் பணி நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

இதற்காக குழிதோண்டும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பணி தொடங்கியது. முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் பின்னர் 70 அடிக்கும் அதிகமான ஆழத்துக்குச் சென்றான். ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டும்போது அந்தப் பகுதியில் கடினமான பாறைகள் இருந்ததால், பணியில் தொய்வு ஏற்பட்டது. மீட்புப் பணியை முதல்நாள் முதலே சம்பவ இடத்தில் இருந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மீட்புப் பணியை ஆய்வு செய்து வருகிறார்கள். ரிக் இயந்திரம் மூலம் போடப்படும் துளை வழியாக சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்க தீயணைப்புப் படையைச் சேர்ந்த மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுக்கள் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மீட்புப் பணிகளை சம்பவ இடத்துக்கு வந்து துணை முதல்வர் .பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். குழந்தை சுர்ஜித்தின் தந்தைக்கும் ஆறுதல் கூறிய .பன்னீர்செல்வம், குழந்தை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதேபோல், கரூர் எம்.பி ஜோதிமணி, தேனி எம்.பி .பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதோடு, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்க வேண்டி தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் சுர்ஜித் மீட்கப்பட வேண்டி நெட்டிசன்கள் வேண்டுதலை முன்னெடுத்து வருகின்றனர்.

கடினமான பாறைகள் இருப்பதால், குழி தோண்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் ரிக் இயந்திரம் போக, அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு குழிதோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதல் இயந்திரம் சுமார் 35 அடி அளவுக்குத் துளையிட்ட நிலையில், நள்ளிரவில் இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியைத் தொடங்கியது. இரண்டாவது இயந்திரம் பணியைத் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நிறைவடைந்திருக்கும் நிலையில், கடினமான பாறைகள் இருப்பதால் அந்த இயந்திரம் 5 அடி அளவுக்குக் குழி தோண்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை மீட்க 110 அடி ஆழம் கொண்ட குழிதோண்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top