ஆளுநர்கள் தேர்தல் பிரசாரத்தில்
ஈடுபட வேண்டுமானால்
பதவியை  இராஜினாமா செய்யுங்கள்
கபே அமைப்பு வேண்டுகோள்



மகாண ஆளுநர்கள் ஜனாதிபதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதோடு, அவ்வாறு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டுமானால் தமது பதவிகளிலிருந்து விலகுமாறும், மாகாண ஆளுநர்களிடம் கோரிக்கை விடுப்பதாக CaFFE அறிவித்துள்ளது.

தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CAFFE) கபே பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆளுநர்கள் ஜனாதிபதி பிரசாரத்தில் சேருவதை CaFFE கடுமையாக கண்டிக்கின்றது. நான்கு மாகாணங்களின் ஆளுநர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். ஆளுநர்கள் அரசியல் செய்ய விரும்பினால் அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் சுதந்திரமாக செயற்படப்போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தபோதிலும், ஜனாதிபதி அவரது பிரதிநிதிகளாக நியமித்துள்ள மாகாண ஆளுநர்கள் பக்கச்சார்பாக  செயற்படுவது ஒரு போதும் நியாயமானதல்ல என, CaFFE தெரிவிக்கிறது.

ஆளுநர்கள் தனது பதவிக்கு முந்தைய 'கௌரவ' பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்கச்சார்பாக அரசியலில் ஈடுபடும் ஆளுநர்கள் தங்களது பதவியிலுள்ள 'கெளரவ' பெயருக்கு இழுக்காக நடக்கின்றனர் எனவும், மனாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மாகாண சபைகளின் ஆட்சி மாகாண ஆளுநர்களிடம் காணப்படுவதனால், மாகாண சபைகளுக்குச் சொந்தமான வாகனங்கள், கட்டடங்கள் மற்றும் அரச வளங்கள் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதாக, முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இது தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறும் செயற்பாடு எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அஹமட் மனாஸ் மக்கீன்  சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவது தொடர்பாக முறைப்பாடுகளை அளிக்குமாறு, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக, அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 387 முறைப்பாடுகள் CaFFE அமைப்பிற்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதி மீறல்கள் மற்றும் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே அவற்றில் பெரும்பாலானவையாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொடர்பு இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் CaFFE அமைப்பிற்கு வழங்கலாம்.
தொலைபேசி: 0114341524
தொலைநகல்: 0112866224
மின்னஞ்சல் info@caffesrilanka.com


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top