`சுர்ஜித்தின் சடலத்தை மீட்டது எப்படி?'
இது எங்களுக்கு ஒரு அனுபவ பாடம்.
இதன்மூலம் பல பாடங்களை
 கற்றுக் கொண்டோம்"
 கலங்கும் புதுக்கோட்டை தீயணைப்பு அலுவலர்கள்

``2 வயதுக் குழந்தை சுர்ஜித்தின் சடலத்தை அவர் விழுந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்தே நவீன கருவிகள் மூலம் மேலே தூக்கினோம்'' என்று தீயணைப்பு அலுவலர் செழியன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதுக் குழந்தை சுர்ஜித் வில்சன் தவறி கீழே விழுந்தார். கடந்த 25-ம் திகதி மாலை 5.30 மணியளவில் விழுந்த குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் மீட்புக் குழுவினர் சுர்ஜித்தை மீட்கப் போராடினர். மீட்புக் குழுவினரின் ஒவ்வொரு முயற்சியும் கடும் சவால்களாகவே இருந்தது. 80 மணி நேரத்துக்கு மேல் மீட்புப் போராட்டம் நடந்தது.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'
 குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது?

ஆரம்பத்தில் சுர்ஜித் விழுந்த ஆழ்துளைக் கிணற்றில் நவீன கருவிகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு ஆழ்துளைக் கிணற்றில் அருகே ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பாறைகள் கடினமாக இருந்ததால் ஜேசிபி, கிட்டாச்சி ஆகிய இயந்திரங்களின் கைகள் உடைந்தன. இதனால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சுர்ஜித் விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதியதாக ஆழ்துளைக் கிணறு போடப்பட்டது. அப்போது 20 அடிக்குக்கீழ் பாறைகள் இருந்ததால் புதியதாக ஆழ்துளைக் கிணறு போடும் பணியும் மீட்புக் குழுவினருக்கு கடும் சவால்களாகவே அமைந்தன. இறுதியில் சுர்ஜித்தின் சடலத்தை இன்று அதிகாலையில் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

இந்தப் பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் என்ன சொல்கின்றார்,
``சுர்ஜித்தை மீட்கும் பணியில் திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு பகல் பாராமல் சுழற்சிமுறையில் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களோடு இதர மீட்புக் குழுவினரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் 27 அடியில் சிக்கியிருந்தபோது கயிறு மற்றும் நவீன கருவிகள், மரா ஆகியவற்றின் உதவியோடு மீட்க முயற்சி செய்தோம்.

சுர்ஜித் விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் அமைப்பு மற்றும் பாறைகள் மீட்புப் பணியில் சிக்கலை ஏற்படுத்தியது. சுர்ஜித் சிக்கிய ஆழ்துளைக் கிணறு 20 அடி வரை 6 இஞ்ச் அகலத்தில் இருந்தது. அதற்குக்கீழ் அதைவிட 4 இஞ்ச் அகலத்தில் போர் போடப்பட்டிருந்தது. இதனால் மேலிருந்து கீழே விழுந்த சுர்ஜித்தின் தலை அந்த இடத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் கயிறு மூலம் சுர்ஜித்தின் கைகளைக் கட்டி தூக்க முயன்றபோது அது பலனிக்கவில்லை. மேலும் சுர்ஜித்தின் உடல் பருமன் குறையத் தொடங்கியதால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கீழே சென்றுக் கொண்டிருந்தார். முதலில் அவர் கீழே செல்வதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். சுர்ஜித்தை ஏர் லாக் மூலம் பிடித்து வைத்திருந்தோம். இந்த முயற்சிகள் மேற்கொள்வதற்குள் சுர்ஜித் 88 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து ரிக் இயந்திரம், போர்வெல் மூலம் புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 1.2 மீட்டர் சுற்றளவில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்க 12 தீயணைப்பு வீரர்களைத் தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் பாறைகள் காரணமாக புதிய ஆழ்துளை கிணறு தோண்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது. முதலில் தைரியமாக போதிய உயிர்காக்கும் கருவிகளோடு நகைமுகன் என்ற தீயணைப்பு வீரர் இறங்கினார். அதன்பிறகு 45 அடி ஆழத்துக்குள் அஜித்குமார் என்ற வீரர் உள்ளே இறங்கினார். தொடர்ந்து புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட சமயத்தில்தான் சுர்ஜித் விழுந்த கிணற்றுக்குள் இருந்து தூர்நாற்றம் வீசத் தொடங்கியது.

இதுகுறித்து மீட்பு குழுவினர் மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் நள்ளிரவில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, சுர்ஜித் உயிரோடு இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்தியதும் அவர் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் நவீன உபகரணங்கள் மூலம் சுர்ஜித்தின் சடலத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அவரின் சடலத்தை கொக்கிகள் மூலம் மேலே தூக்கி வந்தோம். சுர்ஜித்தை உயிரோடு மீட்கத்தான் போராடினோம். ஆனால் அவரை உயிரோடு மீட்க முடியாதது மீட்பு குழுவினருக்கு கடும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது எங்களுக்கு ஒரு அனுபவ பாடம். இதன்மூலம் பல பாடங்களை கற்றுக் கொண்டோம்" இவ்வாறு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

  




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top