அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள்
பழமையான முத்து கண்டுபிடிப்பு
8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவே உலகின் பழமையான முத்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
நவீன தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமையான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத்திலும் நடந்து வரும் தொல்பொருள் ஆய்வுகள் இதையே கட்டியம் கூறுகின்றன.
இந்த ஆய்வுகளில் அடிக்கடி கிடைக்கும் பழங்கால அரிய பொக்கிஷங்கள், அரசுகளின் ஆவலை மேலும் தூண்டி விடுவதுடன், இத்தகைய ஆய்வுகளை மேலும் பரவலாக்கும் அவசியத்தையும் அளிக்கின்றன. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று சமீபத்தில் கிடைத்து உள்ளது.
அங்குள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் கற்காலத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இதில் மிகப்பெரிய பொக்கிஷமாக, பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத்தது. உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப்பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த முத்து கண்டுபிடிக்கப்பட்டதால், அமீரக தொல்பொருள் ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. ‘அபுதாபி முத்து’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் (பாரீசில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தின் கிளை) 30ஆம் திகதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.