ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்
அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக
அமெரிக்க அதிகாரி தகவல்
  


தலைமறைவாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

 ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.

இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர்.

இதன் முதல்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.

சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்  வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தினர்.

இந்த அராஜக ஆட்சியின் மன்னனாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி தன்னை 29-6-2014 அன்று பிரகடணப்படுத்தி கொண்டான்.

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களை தலையில் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள் , அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று ஆவேசக் கூச்சலிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அழகிய இளம்பெண்களை கடத்திச் சென்று தங்களது பாலியல் தேவைக்கும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

தங்களது எண்ணத்தின்படி, மோசூல் நகரில் ஒரு தலைமையிடத்தை ஆட்சிபீடமாக அமைத்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று சுருக்கி அமைத்து கொண்டனர். இதனையடுத்து, அமெரிக்க விமானப்படை துணையுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளை தங்கள் நாட்டில் இருந்து ஒழித்துக்கட்ட ஈராக் அரசு தீர்மானித்தது.

இரண்டாண்டுகளாக மோசூல் நகரை மீட்பதற்காக ஈராக் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வந்தது. இந்த போரின் விளைவாக மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முதன்முதலாக  கைப்பற்றி, தங்களது தலைமை ஆட்சிபீடமாக அறிவித்த நூரி மசூதி மற்றும் அதையொட்டியுள்ள அல்-ஹட்பா கோபுரத்தை ஈராக் படைகள் இறுதியில் கைப்பற்றின.

இதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அராஜக ஆட்சியை வீழ்த்தி விட்டோம் என ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்திருந்தார். போலி இஸ்லாமிய ஆட்சியின் முடிவுநாளை இன்று நாம் காண்கிறோம் என்று குறிப்பிட்ட அவர் இந்த சாதனைக்காக ஈராக் ராணுவம் மற்றும் பன்னாட்டு கூட்டுப்படைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

இறுதி மூச்சுள்ளவரை மோசூல் நகரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என முன்னர் சபதமேற்றிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் ராணுவத்தினருக்கு எதிராக மூர்க்கத்தனமாக போரிட்டு இறுதியாக உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.

தப்பிடோடிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக் நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலவனங்களில் தலைமறைவாக பதுங்கினர், அந்த இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சில முறை ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், அவை எல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்களாகவே அமைந்திருந்தன.

சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தலைமறைவாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி  கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார். இந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

சற்று நேரத்துக்கு முன்னர் மிகப்பெரிய காரியம் ஒன்று நடந்துள்ளதுஎன பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முழுமையான தகவல் கிடைத்தவுடன் அபுபக்கர் அல்-பக்தாதி  கொல்லப்பட்ட விபரத்தை இன்னும் சில மணி நேரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top