ஆழ்துளை கிணற்றில் விழுந்த
சுஜித்தை மீட்க தொடரும் போராட்டம்;
பிரார்த்தனைகள் தீவிரம்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 47 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே அதிநவீன நிலத்தை துளையிடும் 'ரிக்' இயந்திரத்தை கொண்டு குழி தோண்டப்பட்டு வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகிறது.

திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் 2 வயது மகன் சுஜித் வில்சன், தன் வீட்டின் அருகில் பயனில்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் அக்.,25ம் திகதி மாலை 5.30 மணியளவில் விழுந்தான். தகவலறிந்து மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், சுமார் 20 அடி ஆளத்தில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பல்வேறு மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், கடின பாறைகள் இருந்ததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு முயற்சியின் போதும் தோல்வியுற்று, குழந்தை சில அடிகள் கீழிறங்கியதால் 20 அடியில் சிக்கிய குழந்தை 82 அடிக்கும் கீழ் சென்றான். தற்போதைய நிலையில், குழந்தை மயக்கமடைந்து அசைவற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே, பாறைகளை துளைத்து குழி தோன்டும், .என்.ஜி.சி., நிறுவனத்தின் அதிநவீன 'ரிக்' இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன்மூலம், ஒன்றரை மணி நேரத்தில் 100 அடியை தோண்டி விடலாம் என கூறப்பட்ட நிலையில், கடினமான பாறைகள் உள்ளதால் குழி தோண்டும் பணி மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்று (அக்.,27) காலை 7 மணிக்கு துவங்கிய குழி தோண்டும் பணி தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், அதைவிடவும் 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரமும் வரவழைக்கப்பட்டது.

மொத்தம் 98 அடி ஆழத்திற்கு தோண்டியப்பின் பக்கவாட்டில் ஒரு நபர் சென்று வருவதற்கு ஏற்றார்போல் துளையிட்டு குழந்தை மீட்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

மீட்பு பணிகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார் மற்றும் சில அதிகாரிகள் தொடர்ந்து நேரில் கண்காணித்து வருகின்றனர். மேலும், சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என தமிழகம் முழுவதிலும் பல்வேறு மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து சுஜித்தை மீட்க உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top