நீதிமன்ற அவமதிப்பு
– ஞானசார தேரர் உள்ளிட்ட3பேரை
நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு மன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, நீதிமன்ற கட்டளையை அவமதித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரரையும், ஏனையோரையும் வரும் நவம்பர் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு, குருகந்த ரஜமகா விஹாரையின் விஹாராதியின் இறுதிச் சடங்கை குறித்த விஹாரை அமைந்துள்ள பகுதியில் நடத்துவதற்கு தடைவிதிக்க கோரி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோர் செயற்பட்டதன் மூலம் அவர்கள் நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிலங்கா அதிபரினால் அவர் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment