கொழும்பு 02 மியூ வீதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை கையளிப்பதற்கு

உரிய நடவடிக்கை எடுக்குமாறு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை


கொழும்பு 02 மியூ வீதியிலிருந்து 2010 ஆம் ஆண்டு கடந்த ஆட்சி காலத்தில் வீடுகளை தரைமட்டமாக்கி அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சொந்த வதிவிடங்களையும், வியாபார நிலையங்களையும் கொண்டிருந்த குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை மாற்றீடாக எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அல்லது அதற்கு முன்னர் கையளிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், முன்னைய ஆட்சியின் போது பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் அங்கு தமது சொந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் பதறப் பதற ஈவிரக்கமின்றி வெளியேற்றப்பட்ட காட்சியை தாம் நேரில்; கண்டதாகவும், மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மாற்று வீடுகள், அவர்களுக்கான வியாபார நிலையங்கள், காணிகளை இழந்திருந்தால் நிலம் என்பனவும் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு 02 மியூ வீதியில் முன்னர் வீடுகளை இழந்த சட்டபூர்வமான காணி உறுதிகள் போன்ற ஆவணங்களை உடைய 18 குடும்பங்களைச் சேர்ந்த வீட்டுடைமையாளர்கள், மேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை பத்தரமுல்லை, 'செத்சிரிபாய'வில் அமைந்துள்ள அவரது அமைச்சில் சந்தித்து முறையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top