முஸ்லிம்களின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ்

இன்று தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக

வியாபாரக் கம்பனியாக மாறியுள்ளது
ஏ.எம்.ஜெமீல்



முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் உரிமைகளை நிலை நாட்டுவதற்காகவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட பேரியக்கத்தை இன்று ரவூப் ஹக்கீம் தனது தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக வியாபாரக் கம்பனியாக மாற்றியுள்ளார்.
இந்த வியாபாரக் கம்பனியில் நான்கு, ஐந்து பேர் பங்குதாரர்களாக இருந்து கொண்டு கொட்டிப் புரித்துக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். கட்சியைக் காட்டிக் கொடுத்து, நீதிமன்றம் வரை சென்று மரச்சின்னத்தை பறித்து முஸ்லிம்களின் பேரியக்கத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க முற்பட்ட ஹாபிஸ் நசீர் அஹமதிற்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுக்கின்ற அளவுக்கு கம்பனி வியாபாரம் முன்னேறியுள்ளது. உண்மைக்கு உண்மையாக கட்சிக்கும் சமூகத்திற்காகவும் உழைக்கின்ற போராளிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் .எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் .எம்.ஜெமீல் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திடீர் எழுச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை கதி கலங்கச் செய்துள்ளது. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும் அது மூன்று சிங்கள பிரதிநிதித்துவங்களுக்கே வழி வகுக்கும்.
இன்று நான் ஒரு நயவஞ்சகத்தனமான தலைமைத்துவத்தில் இருந்து விடுபட்டு ஒரு நம்பிக்கையான தலைமைத்துவத்துடன் கைகோர்த்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட பேரியக்கத்தை இன்று ரவூப் ஹக்கீம் தனது தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக வியாபாரக் கம்பனியாக மாற்றியுள்ளார்.
அவரால் சமூகத்தை ஏமாற்றி நடாத்துகின்ற அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காகவே புனித மக்காவுக்கு சென்று உம்ரா செய்து விட்டு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். அங்கிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் அவரது பிழைகளையும் சமூகத் துரோகங்களையும் சாய்ந்தமருது மண்ணுக்கான உள்ளூராட்சி சபை திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்து வருவது பற்றியும் சுட்டிக்காட்டினேன். இவற்றுக்கு அவரால் இன்று வரை பதிலளிக்க முடியவில்லை.
இத்தகைய பின்புலத்தில் தான் நான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறி மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டேன். இன்று எவரும் எதிர்பார்க்காதளவுக்கு மக்கள் காங்கிரஸ் பக்கம் மக்கள் அணி திரண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நமது அம்பாறை மாவடத்தில் முன்னொரு தேர்தலிலும் போட்டியிடாத மக்கள் காங்கிரஸ் திடீர் எழுச்சி பெற்றுள்ளது. மூலை முடுக்கு எங்கிலும் மயில் தோகை விரித்தாடுகிறது.
இதனால் முஸ்லிம் காங்கிரஸுக்கு நடுக்கம் பிடித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் முகவர்களும் தடுமாறுகின்றனர். இந்த அச்சம் காரணமாக அவர்கள் ஊடக மாநாடு ஒன்றை நடாத்தி எமது மக்கள் காங்கிரஸையும் தலைவர் றிஸாத் பதியுதீனையும் கடுமையாக விமர்சித்துள்ளதுடன் தமது தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டு அதற்கான பழியை எமது கட்சி மீது போட முற்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற மூன்று முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுள் ஒருவரும் வெற்றி பெற முடியாது என்றும் .தே..வுக்கு கிடைக்கும் மூன்று ஆசனங்களும் சிங்களவர்களுக்கே சென்று விடும் என்றும் முன்னாள் எம்.பி.ஹரீஸ் புலம்புகின்றார்.
எம்மைத் தோற்கடிப்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த காலங்களில் மாற்றுக் கட்சிகளில் அதாஉல்லா, பேரியல் போன்றோர் போட்டியிட்ட போது ஏற்படாத அச்சம் மு.கா.வினருக்கு இன்று மக்கள் காங்கிரஸ் வரவினால் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் தனித்துப் போட்டியிடுகின்றோம். இதுவே 1989 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரப் வகுத்திருந்த தேர்தல் வியூகமாகும். அப்போது ஐக்கிய தேசியக் கட்சியில் அக்கட்சி சார்பில் மூன்று முஸ்லிம்கள் போட்டியிட்டும் சுமார் முப்பதாயிரம் முஸ்லிம் வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொடுத்தபோதிலும் அக்கட்சிக்கு கிடைத்த மூன்று ஆசான்களில் அவர்களுள் ஒருவர் கூட தெரிவாக முடியவில்லை.
காரணம் அவர்களை விட மூன்று சிங்களவர்கள் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தனர். அப்போது தனித்துப் போட்டியிட்ட மு.கா.வுக்கு சுமார் 1500 வாக்குகள் குறைவினால் தலைவர் அஷ்ரப் மட்டும் தெரிவாகியிருந்தார். அன்று .தே..வுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அதேபோன்று 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மயோன் முஸ்தபா சேகு இஸ்ஸதீன் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு முறையே சுமார் 35 ஆயிரம் 32 ஆயிரம் விருப்பு வாக்குகள் பெற்றும் கூட அவர்கள் தெரிவாக முடியவில்லை. அப்போது .தே..வுக்கு கிடைத்த இரண்டு ஆசனங்களும் சிங்களவர்களுக்கே சென்றது.
அதுபோன்ற ஒரு சூழ்நிலையே இன்றும் காணப்படுகின்றது. .தே..வில் போட்டியிடுகின்ற மு.கா. வேட்பாளர் எவரும் வெற்றியீட்ட முடியாது என்பது தெளிவான் உண்மையாகும். மு.கா. மூன்று புள்ளடிக்கு வேலை செய்வது போன்றே சிங்கள வேட்பாளர்கள் மூவரும் இணைந்து ஒற்றுமையுடன் மூன்று புள்ளடிக்கு வேலை செய்கின்றனர். சிங்கள் மக்கள் இது விடயத்தில் தெளிவாக உள்ளனர். ஆனால் மு.கா.வின் முக்கூட்டு இம்முறை வெற்றியளிக்காது. ஏனெனில் அவர்களுக்குள் நிறைய குத்துவெட்டுகள் இடம்பெறுவதுடன் பிரதேச வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் .தே..வில் மு.கா. இரண்டு ஆசனங்கள் பெற்றது போன்று இம்முறை ஒரு ஆசனம் கூட பெற முடியாது.
ஆகவே அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம்கள் தெரிவாக வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே தெரிவு இங்கு மறைந்த தலைவர் அஷ்ரப் வழியில் தனித்துவமாகப் போட்டியிடுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே என்பதை ஹரீஸ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். யார் வென்றாலும் அவர் முஸ்லிமாகவே இருப்பார் என்பது வெட்டவெளிச்சமான உண்மையாகும்.
.தே..வில் போட்டியிடுகின்ற மு.கா. வேட்பாளர்களின் தோல்வி உறுதியானது என்பதை ஒப்புக்கொள்கின்ற ஹரீஸ் அதற்கு மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதே காரணம் என்று கூறுவதும் அது றிஸாத் பதியுதீனின் சதி என்றும் கூறுவது நகைப்புக்கிடமானது என்கின்ற போதிலும் அதன் மூலம் எமது கட்சியின் தாக்கத்தையும் பலத்தையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேவேளை வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் எமது மாக்கள் காங்கிரஸ் .தே..வில் போட்டியிடுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது றிஸாத் பதியுதீனையும் அமீர் அலியையும் தோற்கடிப்பதற்கான சதி என்பதை ஹரீஸ் ஏற்றுக் கொள்கின்றாரா?

யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்பது எமது திட்டமல்ல. எமது கட்சி ஆசனங்களை பெற வேண்டும் என்பதே எமது தேர்தல் வியூகமாகும். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை என்றோ உறுதி செய்து விட்டது. இப்போது நாம் இரண்டாவது ஆசனத்தை நோக்கியே பயணிக்கின்றோம். முஸ்லிம்கள் தனித்துவமாக மூன்று ஆசனங்கள் பெற விரும்பினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றேன்" இவ்வாறு ஜெமீல் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top