பாக்தாத் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து
12 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கிய 12 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலியான தகவல் வெளியாகியுள்ளது.
 பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் யார்முக் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட மின்கசிவால் இங்குள்ள வளர்ச்சியடையாத சிசுக்களை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று தீ பிடித்தது.
மளமளவென்று பரவிய தீயில் சிக்கி 12 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட 26 குழந்தைகள் உடனடியாக பாக்தாத் நகரில் உள்ள இதர அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஹமத் அல் ருடெய்ன் தெரிவித்துள்ளார்
மருத்துவமனையில் நடந்த இந்த துயர சம்பவத்தை கண்டித்து, குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டம் நடத்தினர். இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார். தீவிபத்து ஏற்பட்டதும், 28 பெண் நோயாளிகளும், 8 குழந்தைகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். தீவிபத்தை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

மருத்துவமனை வெளியே குழுமியுள்ள பெற்றோர்கள் சிலர், இன்னும் தங்கள் குழந்தைகள் கிடைக்கவில்லை எனவும், அதிகாரிகள் பதிலளிக்க மறுப்பதாகவும் கண்ணீருடன் கூறினர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top