காஷ்மீரில் 13 லட்சம் 'பெல்லட்' குண்டுகள்
பயன்படுத்தியதாக ராணுவம் ஒப்புதல்
காஷ்மீர் மாநிலத்தில், கடந்த, 32 நாட்களில், கலவரத்தை கட்டுப்படுத்த, 13 லட்சம், 'பெல்லட்' குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக, ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காஷ்மீரில் கடந்த 8 ஆம் திகதி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அம்மாநிலத்தில், பயங்கர கலவரம் வெடித்தது. கடந்த, 42 நாட்களாக, மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது; வன்முறை மற்றும் கலவரத்துக்கு, இதுவரை, 64 பேர் பலியாகி உள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்துவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது, 'பெல்லட்' குண்டுகளால் ராணுவம் சுடுவதாக, பார்லிமென்டில்,
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், காஷ்மீரில், பெல்லட் குண்டுகளை சுட பயன்படுத்தப் படும் துப்பாக்கிகளுக்கு, தடை விதிக்க கோரி, ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில்கூறியிருந்ததாவது:
ஜம்மு - காஷ்மீரில், வன்முறை மற்றும் போராட் டத்தை அடக்க கடந்த, 11ம் திகதி வரை, 32 நாட்களில் 3,000 'பெல்லட்' 'கார்ட்ரிட்ஜ்'க்கள் பயன்படுத்தப் பட் டன. 13 லட்சம் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
கலவரம் கட்டுக்கு அடங்காமல் செல்லும்போது, வழக்கமான தடுப்பு முறைகளைப் பயன்படுத்தி இயல்பு நிலையை மீட்பது மிகவும் கடினம். எனவே, 'பெப்பர்' குண்டுகள், 'பெல்லட்' குண்டுகள் உட்பட, 14 வகையான ஆயுதங்கள், கலவரத் தடுப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த மாதம், 8ம் திகதி முதல், இம்மாதம், 11ம் திகதி வரை, 8,650 கண்ணீர் புகைக் குண்டுகளும், 2,671 பிளாஸ்டிக் 'பெல்லட்'களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. 'பெல்லட்' குண்டு பயன்படுத்துவதை நிறுத்தினால், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி யிருக்கும். அதனால், உயிர் பலி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சி.ஆர்.பி.எப்., தெரிவித்துள்ளது.
பெல்லட் குண்டுகளில், ஈயத்துகள்கள் அடைக்கப்பட்டுள்ளன. இவ்வகை குண்டு, துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்து தாக்கும் போது, ஈயத்துகள் நுாற்றுக்கணக்கில் பீறிட்டு வெளியேறி எதிரிகளை தாக்கி காயப்படுத்தும். இத்துகள்கள், குறிப்பிட்ட ஒரே பாதையில் செல்லாமல், ஒரே சமயத்தில் பலரை தாக்கும்.
ஈயத்துகள்கள் மிக ஆழமாக பாயாதபோதும், உடலின் மென்மையான தோலை ஊடுருவி பலத்த காயங்களை ஏற்படுத்தும். கண்களில் படும்போது, பலத்த சேதம் ஏற்பட்டு பார்வை பறிபோகும் அபாயம் அதிகம்.
காஷ்மீரில் 42-வது நாளாக இன்றும் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஸ்ரீநகர் மாவட்டம், அனந்தநாக் பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவே ஊழியர்கள் கடமைக்குச் சென்று வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலத்தில் சில பகுதிகளில் இணைய சேவைகூட முடக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment