13தான் இறுதித் தீர்வோ?

வடக்கு-கிழக்கு தமிழரின் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும் முயற்சிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் இடம்பெற்று வருகின்றன.இந்த ஆட்சியைப் பயன்படுத்தி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழர் தரப்பு இந்த விவகாரத்தில் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது.
அரசியல் தீர்வை வழங்குவதற்கு  ஏதுவாக இந்த அரசு புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் செயற் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதை நாம் அறிவோம்.இந்த அரசமைப்பும் இதில் உள்ளடங்கப்பட வேண்டிய அரசியல் தீர்வும் எவ்வாறு அமைய வேண்டும் என்று  அரசு மக்களிடம் அபிப்பிராயங்களையும் எடுத்து முடித்துவிட்டது.
அந்த அபிப்பிராயங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ள மக்கள் கருத்தறியும் குழு ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்று சிபாரிசுகளையும் முன் வைத்துள்ளது.
உத்தேச அரசமைப்பை அரசு அடுத்த வருடம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறிய முடிகின்றது.தமிழருக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் அந்த உத்தேச அரசமைப்பில் உள்ளடக்கப்படும்.
இந்த அரசியல் தீர்வு தொடர்பில் தமிழர்கள் ஒரு வகையான எதிர்பார்ப்பில் உள்ளனர்.மஹிந்த அரசில் வைத்திராத நம்பிக்கையை இந்த அரசில் வைத்துக் காத்திருக்கின்றனர்.ஆனால்,அவர்களின் எதிர்பார்ப்புகள்-நம்பிக்கைகள் உரிய பலனை அடையாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
சமஷ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்கிற்குள்தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் உள்ளனர்.ஆனால்,அரசோ பிரிந்த வடக்கு-கிழக்கிற்குள் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் நிற்கின்றது.

இந்த நிலைப்பாடுகள் ஒருபுறமிருக்க 13 ஆம் திருத்தச் சட்டம்தான் தீர்வாக முன்வைக்கப்படும் என்ற தகவலும் அரசுக்குள்  இருந்து வெளிவருகின்றது.தற்போது நடைமுறையிலிருக்கும் செத்துப் போன இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உயிரூட்ட அரசு முற்படுமாக இருந்தால் தமிழர் தரப்பு அதை நிச்சயம் ஏற்காது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதே புலிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.அந்த எதிர்ப்பையும் மீறித்தான் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.
புலிகள் இருக்கும்வரை அந்த மாகாண சபை முறைமையை செயற்படுத்த முடியவில்லை.புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான் அது இயங்கத் தொடங்கியது.இருந்தாலும்,தமிழரின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பில் புலிகளின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது.
காணி,மற்றும் பொலிஸ் அதிகாரம் மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை என்ற நிலைப்பாட்டில்தான் கூட்டமைப்பு இருந்து வருகின்றது.இருந்தாலும்,13 ஆம் திருத்தச் சட்டம் அரசியல் தீர்வுக்கான முதல் படியென கூட்டமைப்பு நம்புவதால் அந்த முறைமையுடன்  இணைந்தே கூட்டமைப்பு இப்போது பயணிக்கின்றது.ஆனால்,அதை இறுதித் தீர்வாக அக்கட்சி  ஏற்றுக்கொள்ளவில்லை.
கூட்டமைப்பு இவ்வாறு கருதி இருக்கும் ஒரு முறைமையை  இறுதித் தீர்வாக வழங்குவதற்கு அரசு முயற்சி செய்யுமாக இருந்தால் தமிழர்கள் நிச்சயம் அதை ஏற்கமாட்டார்கள்.ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒன்றை மீண்டும் கொடுக்க முற்படுவது எப்படி ஆக்கபூர்வமான-நிலையான-இறுதியான அரசியல் தீர்வாக அமையும்?
அதிலும்,இப்போது இருப்பது போன்றே காணி,பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டாமல்தான் தீர்வு வழங்கப்படும் என்று அரசு கூறி வருகின்றது.அரசின் அரசியல் தீர்வு நிலைப்பாடு இதுதான் என்றால் அதை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கத் தேவை இல்லை.1987 ஆம் ஆண்டே அந்தத் தீர்வு வழங்கப்பட்டுவிட்டது.இன்று வரை அந்த முறைமை நாடுபூராகவும் நடைமுறையில் இருக்கின்றது.நடைமுறையில் இருக்கின்ற ஒன்றை-ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஒரு முறைமையை  எப்படி மீண்டும் வழங்கமுடியும்?
13 ஆம் திருத்தச் சட்டம் என்பது அதிகாரங்களை வலது கையால் கொடுத்து அவற்றை  இடது கையால் பறித்தெடுக்கும் ஒரு தந்திரோபாய முறைமையாகும்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை-ஜனாதிபதியை வெறும் டம்மியாக இருக்க வைத்து அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் ஒரு முறைமையையானது எப்படி ஒரு முழுமையான அரசியல் தீர்வாக அமையும்?
இனரீதியிலான பிரச்சினைக்கு முடிவுகட்டும் நோக்கில் இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று சொல்லப்படுகின்றபோதிலும்,அது இனவாதத்தை வளர்க்கும் விதத்தில்தான் செயல்படுகின்றது.
வடக்கு-கிழக்கு ஆளுநர்கள் அதிகாரமிக்கவர்களாக-முதலமைச்சர்கள் டம்மிகளாக  இருப்பதும் வடக்கு-கிழக்கிற்கு வெளியே உள்ள முதலமைச்சகர்கள் அதிகாரமிக்கவர்களாக-ஆளுநர்கள் டம்மிகளாக இருப்பதும் வடக்கு-கிழக்கு இனவாதத்தால் ஆளப்படுகின்றது என்பதற்கு சிறந்த  உதாரணமாகும்.
கிழக்கு முதலமைச்சர் அண்மையில் கடற் படை அதிகாரி ஒருவர் மீது சீறிப் பாய்ந்து பெரும் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்கூட முதலமைச்சரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளமையால் எழுந்ததுதான்.
வெளிப் பார்வையில் 13 ஆவது திருத்தச் சட்டம் சிறுப்பான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் ஒரு பொறிமுறையாகத் தெரிந்தாலும் உண்மையில்,அது பிரச்சினையை மேலும் உருவாக்கும் ஒரு பாதகமான பொறிமுறை என்பதை அதன் செயற்பாட்டை ஆய்வு செய்தால் விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த முறைமையை ஒரு பூரணமான-நிலையான-இறுதியான-ஆக்கபூர்வமான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளமுடியாது.அதில் அதிகாரம் என்பது உண்மையில் பகிரப்படவில்லை.பகிரப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகின்றது.ஒரு கையால் அதிகாரத்தை வழங்கி மறுகையால் அதை பிடுங்கும் ஏற்பாடுதான் அதில் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு முறைமையை இறுதித் தீர்வாக வழங்குவதற்கு அரசு முயற்சித்தால் அதை சிறுபான்மை இன மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.அவ்வாறானதோர் எண்ணம் அரசிடம் இருந்தால் அதைக் கை விடுவதே அரசுக்கு நல்லது.
 [ எம்..முபாறக் ]

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top