காஷ்மீரில் படையினர் - போராட்டக்காரர்கள் மோதல்
5 பேர் உயிரிழப்பு; கலவர பலி 63 ஆக அதிகரிப்பு

39-வது நாளாக தொடர்ந்து ஊரடங்கு!
                                                                                                                                                                          
காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தில் போரட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதலில் 5 இளைஞர்கள் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து கடந்த ஜூலை 9 முதல் கொந்தளிக்கும் காஷ்மீரில் கலவர பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 61 பேர் பொதுமக்கள், 2 பேர் பாதுகாப்புப் படையினர்.
காஷ்மீரில் கடந்த 8 ஆம் திகதி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து காஷ்மீரில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புட்காம் மாவட்டம் மகம் பகுதியில் போராட்டம் வெடித்தது. இன்று 16 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை அரிபதான் பகுதியில் நின்றிருந்த சிஆர்பிஎப் வாகனம் மீது இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 3 இளைஞர்கள் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூலை 9 முதல் நடைபெற்றுவரும் போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் 39-வது நாளாக இன்றும் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஸ்ரீநகர் மாவட்டம், அனந்தநாக் பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவே ஊழியர்கள் கடமைக்குச் சென்று வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலத்தில் சில பகுதிகளில் இணைய சேவைகூட முடக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top