600 அடி உயரத்தில் நடைபெற்ற திருமணம்
கோலாப்பூரில் பரவசம் உண்டாக்கிய சம்பவம்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஆனால் மகாராஷ்டிராவை சேர்ந்த மணமக்கள் இரு மலைகளுக்கு இடையே 600 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கிய படி மாலை மாற்றி தாலி கட்டி புதுமையான முறையில் திருமணம் செய்தனர். இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில், கோலாப்பூரில் இந்த சம்பவம் நடந்தது.
மணமகன் பெயர் ஜெய்தீப் ஜாதவ்(30). இவர் மலை ஏறுவதில் ஆர்வம் உள்ளவர். மருந்து பொருட்களை சந்தை படுத்தும் வேலை பார்க்கிறார். மணமகளின் பெயர் ரேஷ்மா பாட்டீல். இவர் ..எஸ். தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமணம் புதுமையான முறையில் இரு மலைகளுக்கு இடையே 600 அடி உயரத்தில் மணமகனும், மணமகளும் கயிற்றில் தொங்கிய படி இருக்க மாலை மாற்றி தாலி கட்டி நடந்தது. திருமணத்தை நடத்திய ஐயர் சுராஜ் டோலியும்(35) கயிற்றில் தொங்கியபடி மந்திரம் ஓதினார். மணமக்கள் மகாராஷ்டிரா முறைப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.
கோலாப்பூரில் இருக்கும் விஷால்காட் மற்றும் பன்ஹாலா மலை குன்றுகளின் இடையே கயிறு கட்டப்பட்டது. அதில் மூன்று இருக்கைகள் கட்டப்பட்டன. மணமகன், மணமகள் மற்றும் திருமணத்தை நடத்திய ஐயர் ஆகியோர் இந்த இருக்கைகளில் அமர்ந்தனர். பின்னர் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு குன்றுகள் இடையே கயிற்றில் தொங்கவிடப்பட்டனர். இந்த மூன்று இருக்கைகளும் கீழே இருந்த பள்ளத்தாக்கில் இருந்து 600 அடி உயரத்தில் தொங்கின. அவ்வாறு தொங்கிய நிலையில் மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் ஐயர் மந்திரம் சொல்ல மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். கீழே பள்ளத்தாக்கில் நின்று கொண்டிருந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்தவர்கள் இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திருமண சடங்கு 40 நிமிடங்களில் முடிந்தது. ஆனால் மணமகன் மணமகள் கையை பிடித்தபடி, அக்னியை சுற்றி 7 அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கவில்லை. இதன் பின்னர் புதுமண தம்பதிகளும் ஐயரும் கீழே இறக்கப்பட்டனர். கீழே வந்தவுடன் உறவினர்களும் மற்றவர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கூடியிருந்த அனைவரும் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.
கோலாப்பூரில் இருக்கும் மேற்கு மலை ஏறும் விளையாட்டு கழகம் இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தது. மலை ஏறும் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக கழகத்தின் தலைவர் வினோத் காம்போஜ் தெரிவித்துள்ளார். உபகரணங்களை மும்பையை சேர்ந்த மலே அன்வெஞ்சரஸ் அமைப்பும், கோலாப்பூரை சேர்ந்த ஹில்ரைடர்ஸ் அண்டு ஹைக்கர்ஸ் குரூப் என்ற அமைப்பும் கொடுத்து உதவின.

மாப்பிள்ளை ஏற்கனவே மலை ஏறி அனுபவப்பட்டவர். ஆனால் மணமகளுக்கு இது புதுசாகும். எனவே அவருக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாக காம்போஜ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top