அரசை கவிழ்க்கும் மஹிந்த அணியின்
கண்டி – கொழும்பு பாதயாத்திரை ஒரு பார்வை


அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தது.
10 லட்சம் பேரை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் திரட்டுவதாக மஹிந்த ஆதரவு அணி அறிவித்திருந்த போதும் குறைந்தளவானவர்களே நேற்று கொழும்பில் திரண்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கை, வரிச்சுமை, எட்கா ஒப்பந்தம், விசேட யுத்த நீதிமன்றம் என்பவற்றை எதிர்ப்பதாக தெரிவித்து மஹிந்த ஆதரவு அணி ஒழுங்கு செய்த பாதயாத்திரை கடந்த ஜுலை மாதம் 28ம் திகதி கண்டி, பேராதனை பாலத்திற்கு அருகில் ஆரம்பமானது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் தலைமையில் ஆரம்பமான இந்த பாத யாத்திரையில் மஹிந்த ஆதரவு அணியிலுள்ள . . சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் இந்த பாதயாத்திரை ஆரம்பிக்க முதலில் திட்டமிடப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவு காரணமாக கண்டி நகருக்கு வெளியில் இருந்தே பாதயாத்திரை ஆரம்பமானது.
மாவனல்லை நகருக்கு நுழையவும் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலே இரண்டாம் நாள் பாதயாத்திரை கனேதென்னவில் ஆரம்பமாகி நெலுந்தெனியவை வந்தடைந்தது.
3ம் நாள் பாத யாத்திரை நெலுந்தெனியவில் இருந்து நிட்டம்புவவையும் 4வது நாள் கிரிபத்கொடையையும் வந்தடைந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஒவ்வொருநாள் பாதயாத்திரையிலும் இடைக்கிடையே கலந்து கொண்டதோடு பெரும்பாலும் வாகனத்திலேயே பயணித்து மக்களுக்கு கையசைத்துச் சென்றதாக தெரிய வருகிறது.
மஹிந்த ஆதரவு அணியிலுள்ள எம்.பிக்களிலும் அனைவரும் முழுமையாக பாத யாத்திரையில் செல்லவில்லை எனவும் மஹிந்த ஆதரவு அணி ஆதரவாளர்களே கால் கடுக்க கடைசிவரை சென்றதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.
இவர்களுக்கு சாப்பாடு, சாராயம் என்பனவும் வழங்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ஆதரவு அணியின் பாதயாத்திரையினால் கண்டி கொழும்பு வீதியில் தொடர்ச்சியாக வாகன நெரிசல் ஏற்பட்டதோடு பொதுமக்கள், மாணவர்கள், நோயாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட அநேகர் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாக அறிய வருகிறது.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவே மஹிந்த ஆதரவு அணியினர் இந்த பாதயாத்திரையை ஒழுங்கு செய்திருந்த போதும் அதில் சென்றோர் ஆடிப்பாடி கூத்தாடியவாறும் பாட்டுப்பாடி ஆரவாரம் செய்தவாறும் ஊர்வலமாக சென்றனர்.
பாதயாத்திரையில் சென்ற இளைஞர்கள் அதில் பயணித்த எம்.பிக்களுடன் ஆங்காங்கே நின்றுசெல்பிபடம் பிடித்து மகிழ்ந்தனர்.
இதேவேளை பாதயாத்திரையாக வந்து கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டம் நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் அவசர திருத்தப்பணிகளுக்காக மைதானம் மூடப்பட்டு அங்கு முதற்கட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தாம் முன்கூட்டி மைதானத்தை ஒதுக்கிய போதும் வேண்டுமென்று திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மஹிந்த ஆதரவு அணி குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் இதனை கொழும்பு மாநகர சபை நிராகரித்திருந்தது.
இந்த நிலையில் இறுதி நாளான நேற்று காலை 10.30 மணிக்கு மத அனுஷ்டானங்களுடன் பாத யாத்திரை ஆரம்பமானது.
இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக், தான் இதற்கு முன்னர் சென்ற பாத யாத்திரைகளை விட பல மடங்கு பெரியது என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தை துரத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கை இதுவெனவும் குறிப்பிட்டார்.
இறுதிநாள் பாத யாத்திரை ஆரம்பித்த நிலையிலும் பாதயாத்திரை சென்றடையும் இடம் குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
ஹைட்பார்க்கை அடைந்த பின்னர் இறுதி கூட்டம் நடத்தும் இடம் குறித்து முடிவுசெய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் கூறியிருந்தார்.
இதேவேளை கூட்டம் நடத்துவதற்கு மைதானமொன்றை பெற்றுத் தருமாறு பாதயாத்திரையின் இடை நடுவில் வைத்து மஹிந்த ராஜபக், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரியதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.
இது குறித்து ஜனாதிபதியுடன் பேசி ஜனாதிபதியின் அனுமதியுடன் கெம்பல் மைதானத்தையோ காலி முகத்திடலையோ வழங்க முடியும் என பிரதமர் அறிவித்ததாக அறிய வருகிறது.
பிற்பகல் 2.00 மணியளவில் கெம்பல் மைதானத்தில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸாவிடம் பொலிஸார் கையளித்திருந்தனர்.
பாதயாத்திரை கிரிபத்கொடையில் இருந்து களனி, பேலியகொட, பேஸ்லைன் வீதி, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை மருதானை ஊடாக லிப்டன் சுற்று வட்டத்தை அடைந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் பிற்பகல் 3.30 மணியளவில் மாளிகாவத்தையில் வைத்து பாதயாத்திரையில் இணைந்து கொண்டார்.

இறுதி கூட்டம் கெம்பல் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இறுதி நேரத்தில் நேற்று மாலை லிப்டன் சுற்று வட்டத்தில் நடைபெற்றது.
இதேவேளை டார்லி வீதியிலுள்ள சு.. தலைமையகத்திற்கு முன்னாள் பாதயாத்திரை பயணித்த போது பாதயாத்திரை சென்றவர்கள் 'ஹு' கூறி கோஷமெழுப்பியுள்ளனர்.
தற்காலிக நடமாடும் மேடையொன்று அமைக்கப்பட்டு இறுதிக் கூட்டம் நடத்தப்பட்டதோடு ..சு.மு. கூட்டுக் கட்சித் தலைவர்கள் பலரும் இங்கு உரையாற்றினார்கள்.
கெம்பல் மைதானத்தில் கூட்டத்தை நடத்தினால் பாதயாத்திரையில் கலந்து கொண்ட தொகை அம்பலமாகி விடும் என்பதால் சிறிய இடமொன்றில் கூட்டத்தை நடத்தி கூட்டத்தை பெரிதாக காட்ட மஹிந்த ஆதரவு அணி முயன்றதாக சு.. முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் சுமார் 3 ஆயிரம் பேருடன் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொழும்பு கூட்டத்திற்கு வேறு இடங்களில் இருந்து மக்கள் திரட்டப்பட்டதாக அறிய வருகிறது.
10 லட்சம் பேரை கொழும்பில் திரட்டுவதாக சவால் விட்ட மஹிந்த ஆதரவு அணியினால் 10 ஆயிரம் பேரை கூட திரட்ட முடியவில்லை என அமைச்சர் பி. ஹெரிசன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
லிப்டன் சுற்று வட்டத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்தானந்த அலுத்கமகே வரலாற்றில் அதிக மக்கள் பங்கேற்ற பாத யாத்திரை இதுவெனவும் பல்வேறு இடையூறுகள் மேற்கொண்டும் வெற்றிகரமாக இதனை நடத்தியதாகவும் கூறினார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருட காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை நடைபெறுவது உலக சாதனை என உதய கம்மன்பில எம்.பி. குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top