சமூகத்தில் எழுத்தாளர் ஊடகவியலாளர்நிலை பரிதாபத்துக்குரியது

வஸீலா ஸாஹிர்எழுதிய நூல் வெளியீட்டுவிழாவில்

அமைச்சர் றிசாத் பதியுதீன்

(எம்.எஸ்.எம்.சாஹிர்)
முஸ்லிம் சமூகத்தில் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அநேகரது நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. தேவைக்காக அவர்களைப் பயன்படுத்தி விட்டு கைவிடுகின்ற நிலை சமூகத்தில் காணப்படுகின்றது என கைத்தொழில் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தின் எம்.சி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் கல்லொலுவ மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதியநிலவுக்குகள் சில ரணங்கள்சிறுகதை தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,
 நல்ல தொரு தலைப்பிலான நிலவுக்குள் சில ரணங்கள் என்ற சிறந்த சிறுகதை படைப்பை வஸீலா ஸாஹிர் தந்திருக்கிறார். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆக்கங்களை, படைப்புக்களை, புத்தகங்களை எழுதுவதென்பது இலகுவான ஒரு காரியமல்ல,
நல்ல, சிறந்த கலைத்துவமிக்க ஒரு நூலாக இந்த நூல் அமைந்திருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறானவர்களை தட்டிக் கொடுத்து அவர்களுடைய திறமைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேதான் இந்த அழைப்பை நான் ஏற்றேன்.
குறிப்பாக இந்த நாட்டிலே தமிழ், முஸ்லிம் சமூகம் தமிழை தன் தாய் மொழியாகக் கொண்டு பல ஆக்கங்களை உருவாக்கி இருக்கிறது. இந்த தமிழ் மொழிக்காக பாரிய பங்களிப்பை எமது சமூகம் வழங்கி இருக்கின்றது.
 என்றாலும் இந்த நாட்டிலே இங்கு புறையோடிப் போய் இருக்கின்ற இனப் பிரச்சினை, எமது நாட்டிலே எல்லோரையும் வாட்டி வதைக்கின்ற துன்பத்தைத் தந்த அந்தப் பிரச்சினை, இன்று சமாதான காலமாக இருக்கின்ற கடந்த 6வருட காலத்துக்குள் நிம்மதியான ஒரு நல்ல வாழ்வை நோக்கி, நல்ல பொருளாதார வளர்ச்சியை நோக்கி, ஒற்றுமையாக வாழுகின்ற நல்ல சூழ்நிலையை நோக்கி நகரவேண்டும் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டும் பிரார்த்தித்துக் கொண்டும் இருக்கின்ற இந்த நல்ல காலத்திலே, எங்களுடைய சமூகம் பல வகையான சவால்களுக்கு முகங் கொடுத்து வருகின்றது.
அவ்வாறான சவால்களை முறியடிப்பதற்கு ஒரே மொழி பேசுகின்ற, இரண்டு சமூகங்களாக தமிழ், முஸ்லிம் சமூகம் கடந்த சுதந்திரத்துக்குப் பிறகு ஒரே மொழியைப் பேசினாலும் பல வகையான இன்னல்களை, சந்தேகங்களை, எங்களுக்கிடையிலே பிளவுகளை ஏற்படுத்தியதை நாங்கள் மறக்க முடியாது.
எனவே அரசியலுக்காக அல்லது அரசியல் இழுப்புக்காக இரண்டு சமூகங்களையும் தொடர்ந்து பிரித்து வைப்பதற்கு நாங்கள் யாரும் அனுமதிக்க முடியாது. எனவே அவ்வாறான இந்த ஒரே மொழியைப் பேசுகின்ற இரண்டு சமூகங்களும் இணைந்து வாழ வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு  எங்களுக்குள்ளே இருக்கின்ற சிறு சிறு விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதன் ஊடாக  நிம்மதியாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்து, இவ்வாறான நூல்களை வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல.
எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆற்றலுள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு நூலை வெளியிடுவதென்பது பெரிய கஷ்டம். எனவே அவ்வாறான கஷ்டங்களை எல்லாம் தாண்டி ஒரு பெண்மணி ஒரு நூலை வெளியிட்டு வைப்பதை நாங்கள் பாராட்ட வேண்டும்.
எங்களுடைய சமூகத்திலே கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்துத்துறையிலே ஆற்றலுள்ளவர்கள் எத்தனையோ பேர். அதே போல் ஊடகத்துறையிலே மிலிர்ந்து இருக்கின்ற எத்தனையோ பேரை நாங்கள் பார்க்கின்ற போது அவர்களில் அதிகமானோருடைய நிலைமை பரிதாபகரமான நிலையாக இருக்கின்றது. காரணம் தேவைக்காகப் பயன்படுத்தி விட்டு தேவையில்லாத போது அவர்களைப் பற்றி சிந்திக்காத  அரசியல் வாதிகளுடைய செயல்மற்றும் பொருளாதார வளமுள்ளவர்கள் செய்கின்ற உதவி ஒத்துழைப்புகளைப் பார்க்கின்ற போது மிகவும் குறைவாக இருக்கின்றது.
இதனால் அவர்களுடைய ஆற்றலை வெளியே வெளிக் கொணர்வதற்கு, அதனிலும் இந்தத் துறையைச் செய்து கொண்டு, தமது குடும்ப நிலையைச் சமாளிப்பதற்கு அவர்கள் மிகவும் கஷ்டப்படும் ஒரு நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.
எங்களுடைய சமுதாயத்திலே இருக்கின்ற தனவந்தர்களுக்கு ஒரு கடமைப்பாடு இருக்கின்றது. இவ்வாறான துறையிலே இருக்கின்றவர்களை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவி செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது.
இல்லை என்றால் காலப்போக்கில் இந்தத் துறையில் இருக்கின்றவர்கள் அருகிக் கொண்டு செல்லுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். இன்று வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற துறைகளாக இருக்கலாம் அல்லது சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் எல்லாத் துறைகளில் இருக்கின்றவர்களையும் ஊக்கப்படுத்தி வளர்த் தெடுக்க வேண்டிய ஆக்கபூர்வமான கட்டைப்புக்கு மற்றும் இந்தத் துறையை ஊக்கப்படுத்த, எங்களுடைய தனவந்த சமூகமும் இணைந்து செயலாற்றுவதற்குமுன்வர வேண்டும் என்று அன்பாக அழைப்பு விடுக்கின்றேன். என அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.
அங்கு தலைமை வகித்து உரையாற்றிய  நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். எம். அமீன்  தனது உரையின் போது,
இலைமறைகாய்களாக உள்ள திறமைசாலிகளை வெளியுலகிற்குக் கொண்டு வர தனவந்தர்கள் உதவ வேண்டுமென அவர்  வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பு அல் - ஹிதாயா மகா வித்தியாலயத்தின் எம்.சி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடக்கின்ற முதலாவது இலக்கிய விழா இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
கொழும்பிலே கூட்டங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடம் ஒன்று இல்லையே என்ற குறையை ஓரளவேனும் நீக்குவதற்குரிய ஒரு வசதியோடு இந்தக் கல்லூரியிலே கேட்போர் கூடம் அமைந்திருக்கின்றது. இதனை அமைத்துக் கொடுத்த அல் - ஹாஜ் பஹார்தீன் அவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பிலும் எழுத்தாளர்கள் சார்பிலும் முதற் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது போன்ற நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடத்தினால், இந்த மண்டபத்தின் மூலம் கொழும்பு வாழ் முஸ்லிம்களுடைய கல்வி அபிவிருத்திக்குச் செய்கின்ற உதவியாக இது இருக்கும்.
இப்பொழுது கிராமப் புறங்களிலிருந்து எங்களுடைய சகோதரிகள் எழுத்துப் பங்களிப்பைச் செய்து வருகின்றார்கள். அந்த வகையில் நிலவுக்குள் சில ரணங்கள் என்ற இந்த சிறுகதைத் தொகுதியைத் தந்த கல்லொலுவ மினுவாங்கொட வஸீலா ஸாஹிரைப் பராட்டுகிறேன்.
கிராமப் புறங்களிலே இருக்கின்ற பெண் எழுத்தாளர்கள் தங்களுடைய நூல்களை வெளிக் கொணர்வதற்கு படுகின்ற துன்பத்தைப் போக்க ஏதாவது ஒரு அமைப்பு இருக்க வேண்டும். நாட்டிலே இருக்கின்ற பண வசதி படைத்த செல்வந்தர்கள் முன் வந்தால் நூற்றுக்கான எங்களுடைய சகோதரிகளுடைய திறமைகளை வெளிக் கொணர்ந்து சமூகத்துக்குப் பயன்படுத்தலாம். நாட்டுக்கும் பயன்படுத்தலாம்.
எத்தனையோ தனவந்தர்கள் இருந்தும் எங்களுடைய பாடசாலைகளிலே அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். குறிப்பாக கொழும்பிலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய கல்வி நிலை உங்களுக்குத் தெரியும். அப்படியான எங்களுக்கு  அரசாங்க உதவியும் சரியாகக் கிடைக்காத போது நாங்கள் எங்களுடைய சமூகத்தினுடைய ஒத்துழைப்பினால்தான் நாங்கள் இந்தளவுக்கு இருக்கின்றோம்.
இலை மறை காய்களாக இருக்கின்ற திறமையானவர்களது எண்ணங்களை, அவர்களது ஆற்றலை வெளி உலகத்துக்கு கொண்டு வருவதற்காக குறிப்பாக தனவந்தர்களுடைய உதவியை நாடி அவர்களை விழாவுக்காக அழைக்கின்றார்கள். எனவே அதற்காக தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வதற்கு தனவந்தர்கள் முன்வரவேண்டும்.
நூலை வெளியிடுகின்ற நூலாசிரியரை நாங்கள் ஊக்கப்படுத்துவதென்றால், அவர் வெளியிடும் நூலை நாங்கள்  வாங்க வேண்டும். அவ்வாறு வாங்குவதன் மூலமே அவருடைய கருத்துக்களை மேலும் மேலும் சமூகத்துக்குக் கொண்டு வர முடியும். என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.

விழாவில்  இலக்கியப் புரவலர்கள், பிரபல வர்த்தகர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top