சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை

அரசியல்வாதிகளின் பதவிகளைப் பாதுகாக்கும்
சந்தர்ப்ப காய் நகர்த்தலாக மாறியுள்ளதா?



சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப காய் நகர்த்தலாக மாறியுள்ளதா என மக்களால் சந்தேகம் வெளியிடப்படுகின்றது.   
சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தொடர்பாக ஒரு முஸ்லிம் கட்சி அமைச்சர் சம்மந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்தால் மற்ற முஸ்லிம் கட்சி அமைச்சரும் வேறு ஒரு தினத்தில் அந்த அமைச்சரை சந்திக்கின்றார். இவர்களின் அமைச்சருடனான சந்திப்புக்கள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றதே தவிர மக்களின் கோரிக்கை சம்மந்தமான  நடவடிக்கைகளில் எதுவித முன்னேறமும் இதுவரையும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் நியாயமான கோரிக்கைக்கு முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கூட்டாக செயல்படாமல் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கும் மக்களே சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப காய் நகர்த்தலாக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருப்பதாகத்  தெரிவிக்கின்றனர்.    
"ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தனியான உள்ளூராட்சி மன்றத்தைக் கொண்டிருந்த சாய்ந்தமருது எனும் பழம்பெரும் பிரதேசமானது, 1985 ஆம் ஆண்டு கல்முனையுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் தாம் இழந்த உரிமையை மீளப்பெற்றுக் கொள்வதில் அங்கலாய்ப்புடன் இருந்து வருகின்றனர்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை காய்ச்சல் கோஷம் எனக் கூறி எதிர்த்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் அக்கோரிக்கையை நியாயமானது என ஏற்றுக்கொண்டு அப்போதைய 100 நாள் வேலைத்திட்ட அரசாங்க காலத்தில், நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததுடன் அப்போது உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த கரு ஜெயசூரியவை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சகிதம் சந்தித்து அவரது இணக்கத்தையும் உத்தரவாதத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டது. அது உறுதி வழங்கியபடி நடைபெறவில்லை.
அதன் பின்னர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில், தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கித் தரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உறுதியளிக்கப்பட்டது. தேர்தல் முடிவுற்றதும் புதிதாக உள்ளூராட்சி அமைச்சராக பொறுப்பேற்ற பைசர் முஸ்தபாவும் உறுதியளித்திருந்தார். அரசாங்கம் ஒரு வருடத்தை எட்டியும் இதுவரை சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் பிரகடனம் செய்யப்படவில்லை. அதுவொரு மூடு மந்திரமாகவே இருந்து வருகின்றது.
அரசியல் தலைமைகள் அனைவரும் எமது மக்களை வாக்குகள் போடும் ஒரு இயந்திரமாக பாவிக்கின்றனர். ஆனால் மக்களின் தேவைகள் என்று வரும்போது மௌனித்து, ஒளிந்துபோய், வக்கிர அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனரா என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையினரில் சிலர்  நேற்று 10 ஆம் திகதி புதன்கிழமை காலையில் உள்ளூராட்சி மாகாண சபைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை அவரது அமைச்சு அலுவலகத்தில் வைத்து சுயாதீனமான முறையில் சந்தித்து பேசினார்கள்.
குறித்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இன்ஷாஅள்ளாஹ் கூடிய விரைவில் நிறைவேறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என பள்ளிவாசல் தரப்பின கூறியுள்ளனர்.
அப்படியானால் வெளி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் மக்களின் அபிலாஷைகளுக்கு நடவடிக்கை எடுக்கும் போது சாய்ந்தமருது மக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் திகாமடுல்ல மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை விடயத்தில் அக்கறை காட்டவில்லையா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தேர்தல் மேடைகளில் மக்களின் அபிலாஷைகளுக்கு விரோதமாக ஒரு போதும் செயல்படமாட்டேன் எனக்கூறிய மக்கள் பிரதிநிதியும் இது விடயத்தில் தற்போது மெளனம் காப்பது ஆச்சிரியமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உள்ளூராட்சி மாகாண சபைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை சந்தித்த விடயத்தை மக்களை கட்சி ரீதியாகப் பிரித்து வைத்துக் கொண்டு ஏமாற்றிக்கொண்டிருக்கும்  முஸ்லிம் கட்சிகள் சார்பான சிலர் தத்தமது கட்சிகளுக்கு சார்பாக செய்திகளை எப்படி கட்சிக்கு ஆதரவாகப் பரப்பியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பானவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய  சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதென உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
சாய்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்தை வழங்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிவதற்காக சாய்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் உள்ளிட்ட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் (10) புதன்கிழமை காலை அமைச்சர் பைசர் முஸ்தபாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது உள்ளுராட்சி மன்றம் வழங்கப்படுவதில் உள்ள கால தாமதம் தொடர்பிலும் அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது உள்ளுராட்;சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா குறித்த நம்பிக்கையாளர் சபையினரிடம் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமரின் பணிப்புரைக்கு அமைவாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வழங்கப்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றதென தெரிவித்தார்.
அத்தோடு செப்டம்பர் மாதமளவில் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் நானும் சாய்ந்தமருதுக்கு வருகைதந்து குறித்த உள்ளுராட்சி மன்றத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மக்கள் முன் தெரிவிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைவிடயமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பானவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி,
சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயம் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்  உறுதி மொழி வழங்கியுள்ளேன்; நிச்சயம் நிறைவேற்றுவேன்!
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என உள்ளூராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களை பொதுமக்கள் சந்திக்கும் தினமாகிய இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினருக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்க்கும் இடையில் இடம்பெற்ற சுயாதீனமான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்ப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவிக்கையில்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரை சந்தித்து இவ் உறுதி மொழியினை ஏற்க்கனவே வழங்கி இருக்கிறேன். உங்களது ஊரின் சகல ஆவணங்களையும் எம்மிடம் தந்துள்ளார்நீங்களும் அவ்வூர் சார்பாக வந்துள்ளீர்கள் இதனை நிறைவேற்றுவேன். அதேபோன்று அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் உங்களது ஊருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வர உள்ளேன். இது தொடர்பில்  முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் என்னை ஒரு தடவை சந்தித்துள்ளார் என்றும் தெரிவித்தார்
இந்த செய்திகளைப் பார்க்கும் போது சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் விடயமாக சில அரசியல்வாதிகள் கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-    மக்கள் விருப்பம்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top