நல்லது செய்திருந்தால் ஏன் இந்த நடை?
ஆட்சியை இழந்த மஹிந்த ராஜபக்ஸ அதை மீளக்கைப்பற்றுவதற்கு இப்போது மிகவும் போராடுகின்றார்.அரசுக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி-சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதத்தைக் கிளப்பி அரசைக் கவிழ்ப்பதற்கு சதி செய்கிறார்.அதற்காக அவர் இப்போது நடையாய் நடக்கின்றார்.மாவனெல்லையில் இருந்து கடந்த மாதம் 28 ஆம் திகதி நடக்கத் தொடங்கியவர் கொழும்பில் அதை நிறைவு செய்தார்.
மிகவும் பலமான ஓர் ஆட்சியைக் கட்டி எழுப்பியிருந்த மஹிந்த அதை இழந்து தவிப்பது ஏன்?அந்த ஆட்சி சரிவதற்குக் காரணம் என்ன ?போன்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில் ''அக்கிரம ஆட்சிதான்''.
நியாயமான ஆட்சி ஒன்றை நடத்தி இருந்தால் இப்படி கால் வலிக்க நடக்கத் தேவை இல்லை என்ற ஜனாதிபதி மைத்திபாலவின் கருத்து இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுந்திப் போகின்றது.இந்தக் கருத்து முற்றிலும் உண்மை.
மஹிந்தவின் அரசு ஒரு கட்டத்தில் அசைக்கமுடியாத மிகவும் பலமான அரசாகத் திகழ்ந்தது.பல தசாப்தங்களுக்கு இவரது பரம்பரையே நாட்டை ஆளப்போகின்றது என்று நம்பப்பட்டது.ஆனால்,அநியாயத்தால் கட்டி எழுப்பப்படும் அரசு எவ்வளவு பலமானதாக இருந்தாலும் அது தற்காலிக பலமே என்பதற்கு மஹிந்த அரசு சிறந்த உதாரணமாக அமைந்துவிட்டது.
யுத்த வெற்றி என்ற ஒரேயொரு காரணத்தால்தான் அவரது அரசு பலமடைந்து இருந்தது.ஆனால்,அந்த யுத்த வெற்றிக்குள் புதைந்திருந்த மக்களின் கண்ணீர்,அடக்குமுறை மற்றும் இனவாதம் போன்றவை அந்த யுத்த வெற்றியை சிதைத்துவிட்டன .அந்தச் சிதைவே மஹிந்த அரசின் சிதைவாக மாறியது.
மஹிந்த ஆட்சி எவ்வளவு கொடூரமானது-எவ்வளவு இனவாதமிக்கது-சிறுபான்மை இன மக்களுக்கு எவ்வளவு பாதகமானது என்பதை நாம் அறிவோம்.மஹிந்தவின் ஆட்சி நெடுகிலும் இந்த நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் கண்ணீருடனும் கவலையுடனும்தான் காலத்தைத் தள்ளினர்.
இந்த நாட்டில் சிறுபான்மை இனம்,பெரும்பான்மை இனம் என்று யாருமில்லை.எல்லோருமே இலங்கையர்கள் என்று கூறிக்கொண்டே சிறுபான்மை இன மக்களை மிகவும் மோசமாக நடத்தத் தொடங்கினார் மஹிந்த.ஆனால்,அந்த மக்களின் கண்ணீரில்தான் மஹிந்தவின் ஆட்சி மூழ்கியது.
யுத்த வெற்றியின் பெயரில்-அதன் மமதையில் சிறுபான்மை இன மக்களுக்கு மஹிந்த செய்த அநியாயங்கள் அனைத்தும் ஒன்று திரண்டே மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தன.மக்களின் கண்ணீரால் கட்டி எழுப்பப்படும் ஆட்சி நிலைக்காது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்ட மஹிந்த பதவி மோகம் காரணமாக குறிகிய காலத்துக்குள்ளேயே அரசியலுக்குத் திரும்பி வந்துவிட்டார்.இன்று அவர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக படாதபாடு படுகின்றார்;நடையாய் நடக்கின்றார்.
பாத யாத்திரை வென்றதா?========================
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த மாதம் 28 ஆம் திகதி மாவனெல்லையில் வைத்து மஹிந்தவால் தொடங்கப்பட்ட பாத யாத்திரை நேற்று கொழும்பில் முடிவடைந்தது.கொழுப்பு கரைந்து சீனி நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தவிர வேறு எந்த பயனையும் இந்தப் பாத யாத்திரை மஹிந்த தரப்புக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.
10 லட்சம் பேரை இந்தப் போராட்டத்தில் இறங்குவோம் என்று கூறினர்.ஆனால்,வெறும் 10 ஆயிரம் பேரைக்கூட அவர்களால் இறக்க முடியவில்லை.5 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே அதில் கலந்துகொண்டனர்.
பாத யாத்திரையில் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் என்று காட்டுவதற்காக நீண்ட இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நடந்து சென்ற அந்தக் கேவலமான தந்திரோபாயத்தையும் நாம் கண்டோம்.தேவையா இந்தப் பிழைப்பு என்று பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு அந்தக் காட்சி அமைந்திருந்தது.
நாமலின் வினோத நடனம்========================
நாமலின் நடனத்தைக் காண்பதற்காக வீதியோரங்களில் ஒன்றுகூடிய மக்களையெல்லாம் பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் பட்டியலில் சேர்த்து கணக்கு காட்டும் அளவுக்கு மஹிந்தவின் அரசியல் வங்குரோத்து நிலைமையை அடைந்துவிட்டமை பரிதாபத்திலும் பரிதாபம்.
உண்மையில்,இது ஆட்சியைப் பிடிக்கும் பாத யாத்திரையா அல்லது நாமலின் வினோத நடனத்தை பிரபல்யப்படுத்தும் வைபவமா என்று கேட்கும் அளவுக்குத்தான் அந்த நிகழ்வு அமைந்திருந்தது.
நாமல் ஆடி வருகின்றார் என்று கேள்விப்பட்டே மக்கள் வீதிகளின் இரு மருங்கிலும் ஒன்றுகூடினர்.ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீதியில் நடனமாடி வந்தால் அது மக்களுக்கு கண்கொள்ளாக் காட்சிதானே.அந்தக் கண்ராவியைக் காண்பதற்கு மக்கள் குவியத்தானே செய்வார்கள்.அவ்வாறு குவிந்தவர்கள் அனைவரையும் பாத யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் என்று கூறுவது கேவலத்திலும் கேவலம்.
மொத்தத்தில் இந்தப் பாத யாத்திரை கொழுப்பைக் குறைப்பதிலும் சீனி நோயைக் கட்டுப்படுத்துவதிலும் வெற்றிகண்டுள்ளதே தவிர அரசியல்ரீதியாக எந்தவொரு நன்மையையும் மஹிந்தவுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை.இந்தப் போராட்டம் நாட்டில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.ஓரிரு நாட்களாக ஊடகங்களுக்கு செய்தியாகப் போனதோடு சரி.அவ்வளவுதான்.
இனவாதத்தைக் கக்கிய பாத யாத்திரை===================================
இந்தப் பாத யாத்திரையில் அதிகம் எழுப்பப்பட்டது சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இனவாதக் கோசம்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த அரசு தமிழீழத்தை உருவாக்கப் போகின்றது என்றும் புலிகள் மீண்டும் வர போகிறார்கள் என்றும் பௌத்த மதம் அழியப் போகின்றது என்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழையப் போகின்றார்கள் என்றும் பலதரப்பட்ட இனவாதக் கோஷங்கள் அந்த யாத்திரையில் எழுப்பட்டதை கேட்கக்கூடியதாக இருந்தது.
மஹிந்த தரப்பின் இனவாத சிந்தனைக்கு தீனி போடும் ஒரு நிகழ்வாகவும் இந்த யாத்திரை அமைந்திருந்தது என்றும் சொல்லலாம்.இனவாதம் அவர்களின் துருப்புச் சீட்டு என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்தே வருகின்றனர்.தோல்வி கண்ட இந்த இனவாதம் இனி ஒருபோதும் வெற்றிபெறா என்பதுதான் யதார்த்தம்.ஆக,இந்தப் பாத யாத்திரை பிசுபிசித்தே போனது.
[ M.I.Mubarak ]
0 comments:
Post a Comment