பெண்ணுடனான தவறான உறவைக் கைவிட மறுத்த
தொழில் அதிபர் கழுத்தை அறுத்துக் கொலை மனைவி கைது!



பெண்ணுடனான தவறான உறவை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவில் இடம்பெற்றுள்ளது
சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்த நிலையில் கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் சடலமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்கூட வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது.
அக்பர் கொலை தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் பொலிஸார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார்.
அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. அந்த தவறான உறவைக் கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தும் இருக்கின்றார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அக்பரிடம், பாத்திமுத்து பெண்ணுடன் இருக்கும் தவறான உறவைக்  கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்பர், பாத்திமுத்துவை தாக்கியதுடன், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சென்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாத்திமுத்து, அக்பர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கியுள்ளார். காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாத்திமுத்து மீது பொலிஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பெண்ணுடனான தவறான உறவைக் கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top