அரசாங்க சேவைக்கு ஆட்களை இன விகிதாசார அடிப்படையில் 

சேர்த்துக்கொள்ளும் பொது நிருவாக

சுற்றுநிருபம் 15/90 நடைமுறையில் உள்ளதா?

தகவலறியும் சட்டத்தின் கீழ் கேள்வி

(அபூ முஜாஹித்)


அரசாங்க சேவைக்கு ஆட்களை சேர்த்துக்கொள்ளும் போது இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டுமென்ற பொது நிருவாக அமைச்சின் 15/90ம் இலக்க சுற்றுநிருபம் தற்போதும் நடைமுறையில் உள்ளதா என்பது பற்றிய விபரம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பொது நிருவாக அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை வழங்குமாறு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் பொது நிருவாக அமைச்சின் தகவல் அதிகாரியிடம் கோரியுள்ளார்.
1990ம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி சுற்றுநிருபம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் பொது நிருவாக அமைச்சராக மறைந்த பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கடமையாற்றிய சமயம் உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றிற்கமைய கைவிடப்பட்டது.
எனினும் கிழக்கு மாகாணத்தில் மேற்படி சுற்றுநிருபம் பின்பற்றப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் செல்லுபடியற்றதாக்கப்பட்ட மேற்படி சுற்றுநிருபம் கிழக்கு மாகாணத்தில் பின்பற்றப்படுவதனால் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது நிருவாக அமைச்சு இதனை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
தேசிய மட்டத்தில் இடம்பெறும் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு என்பவற்றில் மேற்படி சுற்றுநிருபம் நடைமுறைப்படுத்தப்படாமையால் தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. மேற்படி சுற்றுநிருபத்திற்கமைய நியமனங்கள் வழங்கப்பட்டால் சிங்களவர்களுக்கு 75 வீதமும் தமிழர்களுக்கு 12 வீதமும், முஸ்லிம்களுக்கு 10 வீதமும், ஏனையோருக்கு 03 வீதமும் விகிதாசார அடிப்படையில் அரச நியமனங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top