கிழக்கு மாகாணக்கல்வித் திணைக்களம்

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்

மாதாந்தம் நடமாடும் சேவைகளை நடாத்த வேண்டும்

- ..நி.சே சங்கம் வலியுறுத்து
              
  (அபூ முஜாஹித்)   



கிழக்கு மாகாணக்கல்வித் திணைக்களமும், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதி மாதமும் இடம்பெயர் சேவைகளை நடாத்தி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரல் வேண்டுமென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
நிருவாக ரீதியாக கிழக்கு மாகாணத்தின் தலைநகராக மட்டக்களப்பு நகரமே இருந்திருக்க வேண்டும். காலனித்துவ ஆட்சியாளர் காலத்தில் கிழக்கின் தலைநகராக மட்டக்களப்பு தான் இருந்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது வட மாகாணத்தவர்களுக்கு வசதியாகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாக திருகோணமலை மாற்றியமைக்கப்பட்டது. இது கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போதாவது மாற்றம் செய்யப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் கிழக்கு மாகாண கல்வித்துறையில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் அதிகாரிகளின் நன்மை கருதி கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கிழக்கில் உள்ள மாவட்டங்களின் மைய மாவட்டம் என்ற வகையில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண கட்டிடத் திணைக்களம், மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் என்பன மட்டக்களப்பில் அமைக்க முடியுமாக இருந்தால் எண்ணிக்கையில் கூடிய அரச ஊழியர்களைக் கொண்ட கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் மட்டக்களப்பிற்கு இடம் மாற்றப்படாமல் இருப்பது பாரிய அநீதியாகும்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கும், கல்வி அமைச்சுக்கும் தமது உத்தியோகக் கடமைகளை மேற்கொள்ள செல்லும் ஆசிரியர்களும், அதிபர்களும் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தோர்   சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் அதிகாலை வேளையில் திருமலைக்கு பிரயாணம் செய்தும் தமது காரியங்களை முடித்துக் கொள்ளாமல் மாலை ஆறு மணிவரை அலைந்து திரிந்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புகின்றனர்.
புதன்கிழமை மட்டுமே வரமுடியுமென்ற நிபந்தனை விதிக்கப்படுவதனால் புதன்கிழமைகளில் முதலமைச்சர் கூட்டம், ஆளுனர் கூட்டம், பிரதம செயலாளர் கூட்டம் என்பன போன்ற பல்வேறு கூட்டங்கள் இடம்பெறுகின்றன. இதனால் அதிபர், ஆசிரியர்களின் வேலைகள் அம்போ என்றாகிவிடுகின்றன.
இதனை தவிர்க்கும் விதத்தில் அம்பாறை, மட்டக்களப்பு ஆசிரியர்களின் நன்மை கருதி பிரதி மாதமும் கிழக்கு மாகாணக்கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்பன கூட்டாக இடம்பெயர் சேவைகளை நடாத்த வேண்டுமென கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top