மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா
நல்லடக்கம் நாளை மறுநாள் 4ம்திகதி இடம்பெறும்
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா நல்லடக்கம் நாளை மறுநாள் (ஜுன் 4ம்திகதி) நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கவிஞரும், தமிழ் பேராசிரியருமான அப்துல் ரகுமான் (80) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.
அப்துல் ரகுமானின், ஜனாஸா பனையூரில் நாளை மறுநாள் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் அப்துல் ரகுமானின் மகன் வெளி நாடு ஒன்றில் இருந்து வரவேண்டி இருப்பதால், ஜனாஸா நல்லடக்கம் நாளை மறுநாள் (ஜுன் 4ம்திகதி) இடம்பெறும் என கூறப்படுகிறது.
வாழ்க்கை குறிப்பு:
கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் தொடங்கினார்.
தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றிருந்தார்.
இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
0 comments:
Post a Comment