கொழும்பில் சேரும் குப்பைகளை, புத்தளம் அறுவக்காடு பிரதேசத்திற்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்ததற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

புத்தளத்தை அரசு தொடர்ந்து துன்பப்படுத்தி வருகின்றது. வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்களை தாங்கிக் கொண்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்துள்ளது புத்தளம்.

இதுவரையில் புத்தளத்திலுள்ள மக்களுக்கு எந்த இழப்பீடுகளும், நஷ்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை. இருப்பினும் சீமெந்து தொழிற்சாலையை அங்கு நிறுவி புத்தளத்தை மாசுபடுத்தி உள்ளீர்கள். அனல்மின் நிலையத்தை அரசு கொண்டு வந்து அந்த மக்களை கஷ்டத்தில் போட்டுள்ளது.
சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்ட போது எதிர்ப்புக்களால் தானே கைவிடப்பட்டது. புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும் போது தொழில்வாய்ப்பில் 50சதவீதம் தருவதாக கூறினீர்களே, அது நடந்ததா?

1989ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. தேசிய கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாந்து போய் உள்ளனர்.


அரசியல் அனாதைகளாக இருக்கும் அந்த மக்களை பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் நீங்களும் துன்பப்படுத்துகிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top