நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீளாய்வு செய்து உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிப் பத்திரிகையில் கல்முனை மாநகர சபை வட்டாரங்கள் 23 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வட்டாரங்களுக்கான கிராமங்கள் குறித்து எவ்வித பதிவுகளும் இடம்பெறாமல் வெறுமனே சகல கிராமங்களும் கல்முனை என வெளியிடப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபைக்குள் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு,
நற்பிட்டிமுனை, கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமபாத், சாய்ந்தமருது ஆகிய கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை முன்னர் கரைவாகு மேற்கு கிராம சபை, கரைவாகு வடக்கு கிராம சபை, கரைவாகு தெற்கு கிராம சபை, கல்முனை பட்டிண சபை ஆகியவற்றுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நாட்டிலுள்ள ஏனைய மாநகர சபைகளின் வட்டாரப்பிரிப்பின் போது அம்மாநர எல்லைக்குள் வரும் கிராமங்களின் பெயர்களைக் குறித்து வட்டாரப்பிரிப்பு இடம்பெற்றுள்ளது. உதாரணமாக கொழும்பு மாநகர சபை 47 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு மட்டக்குளி, நவகம்புர, தெமட்டகொட, மருதானை, கோட்டை, பஞ்சிகாவத்தை என வட்டாரங்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் பெரிய கடை, அத்தியடி, சுண்டிக்குளி, குருநகர், யாழ்ப்பாண நகரம் என்றவாறு பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், கல்முனை மாநகர சபை மாத்திரம் வட்டாரத்தின் பெயரும், வட்டாரத்தின் இலக்கமும் ஒன்றாகக் குறிக்கப்பட்டு கல்முனை மாநகர எல்லைக்குள் உள்ள கிராமங்கள் யாவும் மறைக்கப்பட்டு பாரிய அநியாயம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக கல்முனை வட்டாரம் - 1, வட்டாரத்தின் பெயர் வட்டாரம் - 1 எனக் குறிப்பிடப்பட்டு பெரிய நீலாவணை கிராமம் மறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வட்டார இலக்கம் - 18, வட்டாரப்பெயர் வட்டாரம் - 18 எனக்குறிப்பிடப்பட்டு சாய்ந்தமருதின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபையொன்றை மக்கள் கோரி வருகையில் அக்கோரிக்கையை மழுங்கடிக்கும் விதத்திலும், சாய்ந்தமருது கிராமமொன்றை இல்லாமலாக்கும் ஏற்பாட்டிலும் இவ்வாறான வட்டாரப்பிரிப்பு இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது மக்களும், புத்திஜீவிகளும், இளைஞர்களும் ஆத்திரத்துடன் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வட்டாரப் பிரிப்பில் கிராமங்களை இல்லாமல் செய்வதில் பிரதேச அரசியல்வாதி ஒருவரும், அவரது அடிவருடிகளும் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களின் அணுசரனையையும், கல்முனை மாநகர சபை ஆணையாளரின் அணுசரனையையுமு; அவ்வரசியல்வாதி பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. இவரது முக்கிய நோக்கம் சாய்ந்தமருதிற்கு பிரதேச சபையை பெற்றுக் கொடுக்கக் கூடாது என்பதாகும். இதற்கு ஏனைய கிராமங்களையும் அவர் இரையாக்கியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையும், கல்முனை மாநகர சபையும் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதை என்பதைக்காட்டும் வர்த்தமானி அறிவித்தல் கீழுள்ளது.
0 comments:
Post a Comment