சவூதி அரேபியாவிலுள்ள தமாம் நகரிலிருந்து, கடந்த 18-ம் திகதி கொச்சிக்கு வந்துகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நிறைமாத கர்ப்பிணி ஜோஸ் என்பவரும் பயணித்தார். விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள் உதவியுடன் அதே விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த செவிலியர் வில்சன் என்பவர் பிரவசம் பார்த்தார். சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, விமானம் மும்பைக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது.
பைலட், பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்த விஷயத்தை மும்பை விமான நிலையத்துக்குத் தெரிவித்தார். அடுத்த அரை மணி நேரத்தில், மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள, மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை 2 கிலோ எடை இருந்தது. மும்பை மருத்துவமனையில் நான்கு நாள்கள் இருந்த பின், தாயும் சேயும் கொச்சி திரும்பினர். அந்தக் குழந்தைக்கு 'ஜெட்ஸன்' என தாய் ஜோஸ் பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து குழந்தையின் தாய் ஜோஸ் கூறுகையில், ''விமானப் பணிப்பெண்கள், விமானக் குழுவினரின் உதவியால்தான் என் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்தேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'ஜெட்ஸன்' எனப் பெயரிட்டுள்ளேன்'' என்றார். முன்னதாக, ஜெட் ஏர்வேஸில் பிறந்த இந்தக் குழந்தைக்கு, அந்த நிறுவனம் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்க பாஸ் வழங்கியுள்ளது.

பொதுவாக, கர்ப்பம் தரித்து 30 வாரங்கள் ஆகியிருந்தால் பெண்கள், விமானத்தில் பறக்க மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். 35 வாரங்களுக்கு மேலாகியிருந்தால், சர்வதேச விமானங்களில் பறக்கத் தடை இருக்கிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top